சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து
|யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் இதே குற்றச்சாட்டிற்காக கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட 16 காவல் நிலையங்களில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த 17 வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க வேண்டும் என்று அவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு வழக்கில் ஜாமீன் வழங்கினால் மற்றொரு வழக்கில் கைது செய்யப்படுவதாக சவுக்கு சங்கர் தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து வழக்குகளும் ஒரே சம்பவத்துக்காக பதியப்பட்டதா என சரிபார்க்க அவகாசம் வழங்க வேண்டும் என போலீசார் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்ட 17 வழக்குகளும் ஒரே குற்றத்திற்காக பதிவு செய்யப்பட்டதா என்பது குறித்து காவல்துறை விளக்கமளிக்க வேண்டும் என்றும் அந்த 17 வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்றும் கூறி இந்த மனு மீதான விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதற்கிடையே சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளதை எதிர்த்து அவரது தாயார் ஆட்கொணர்வு மனுவை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியம், சிவஞானம் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது "சவுக்கு சங்கரின் கருத்தால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை" என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
போலீசார் தரப்பில், "சவுக்கு சங்கர் தொடர்ந்து அவதூறு கருத்துகள் தெரிவிப்பதை தடுக்கவே குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.