< Back
மாநில செய்திகள்
தி.மு.க.வில் அதிரடி: அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் இருந்து மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு
மாநில செய்திகள்

தி.மு.க.வில் அதிரடி: அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் இருந்து மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு

தினத்தந்தி
|
11 Jun 2024 1:53 PM IST

விழுப்புரம் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில், அமைச்சர் பொன்முடியின் மகனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

சென்னை,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த நா.புகழேந்தி, கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவர் மறைவுக்கு முன்பாக நாடாளுமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டு விட்டதால், அந்த தேர்தலுடன் சேர்ந்து விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை நடத்த முடியவில்லை.இதற்கிடையே தற்போது விக்கிரவாண்டி தொகுதிக்கு அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. எனவே, இடைத்தேர்தலை சந்திக்க ஆளுங்கட்சியான தி.மு.க. முன்கூட்டியே ஆயத்தமாக தொடங்கியிருக்கிறது.

அமைச்சர் பொன்முடியின் மகனுக்கு பதவி

மரணம் அடைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி ஏற்கனவே விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பதவியையும் வகித்து வந்தார். அந்த இடத்துக்கு தற்போது அமைச்சர் க.பொன்முடியின் மகன் டாக்டர் கவுதமசிகாமணி நியமிக்கப்பட்டு உள்ளார்.

இது தொடர்பாக, தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக பணியாற்றி வந்த நா.புகழேந்தி மறைவெய்திய காரணத்தால் கட்சிப் பணிகள் செவ்வனே நடைபெற டாக்டர் தெ.கவுதமசிகாமணி விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் செஞ்சி மஸ்தான் கட்சிப் பதவி பறிப்பு

இதேபோல், விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக இருந்த அமைச்சர் செஞ்சி மஸ்தானும் அதிரடியாக மாற்றப்பட்டு, ப.சேகர் புதிதாக அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக, தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக பணியாற்றி வரும் செஞ்சி கே.எஸ்.மஸ்தானை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து, அவருக்கு பதிலாக திண்டிவனம் ஜெயபுரத்தை சேர்ந்த டாக்டர் ப.சேகர் புதிதாக அந்த பொறுப்புக்கு நியமிக்கப்படுகிறாார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்