பள்ளிக் கல்வித்துறை வாகனத்தில் மத வாசகமா..? - தமிழக அரசு விளக்கம்
|தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை வாகனத்தில், மத வாசகம் எழுதப்பட்டுள்ளதாக ஒரு காரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சென்னை,
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை வாகனத்தில், 'இயேசு உங்களை நேசிக்கிறார்' என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளதாக ஒரு காரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கமான தகவல் சரிபார்ப்பகம் மறுத்துள்ளது.
இதுதொடர்பான அந்த பதிவில், "இது தவறான தகவல். தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் தனியார் வாகனங்கள் ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஒப்பந்த வாகனங்களில் 'ஜி' என்ற ஆங்கில எழுத்து ஸ்டிக்கர் ஒட்டினால் பறிமுதல் செய்யப்படும் என்று கடந்த 2021-ம் ஆண்டே போலீஸ் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதுகுறித்த செய்தியிலும் இந்த படம் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில், ஒப்பந்த அடிப்படையில் இயங்கும் தனியார் வாகனத்தை அரசு வாகனம் என்று குறிப்பிட்டு அதில் கிறிஸ்தவ மத வாசகம் இடம்பெற்றுள்ளதாக தவறாக பரப்பி வருகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை அசோக்நகர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் மகா விஷ்ணு என்பவர் முற்போக்கு சிந்தனைகளுக்கு எதிராகவும், மாற்றுத்திறனாளிகளை குறிப்பிட்டும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதன் எதிரொலியாக பள்ளிகளில் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அதிரடியாக தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.