அதிமுக நிர்வாகியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
|கொலை வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளி உள்பட 9 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
சேலம்,
சேலம் அதிமுக நிர்வாகி சண்முகம் நேற்று இரவு ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் .இதை அடுத்து அவரது உடலை மீட்ட போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர் .அதன்படி இன்று காலை 10.30 மணியளவில் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் சண்முகம் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
தொடர்ந்து உறவினர்களிடம் அவரது உடலை பெற்றுச் செல்லுமாறு போலீசார் கூறினர். ஆனால் சுமார் மூன்று மணி நேரம் ஆகியும் உறவினர்கள் சண்முகம் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் மேலும் முக்கிய குற்றவாளிகளை கைது செய்தால் தான் உடலை வாங்குவோம் என்று கூறி வருகிறார்கள்.
இதை அடுத்து மாநகர துணை கமிஷனர் மதிவாணன், முன்னாள் அமைச்சர் செம்மலை மற்றும் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் பாலசுப்ரமணியன் எம் எல் ஏ உள்பட அதிமுகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது போலீசார் அவர்களிடம் கூறுகையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளி உள்பட 9 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம் மேலும் நீங்கள் உடலை பெற்றுச் சென்றால்தான் நாங்கள் விரிவாக விசாரணை நடத்தி அதில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய முடியும் எனவே உடலை பெற்று செல்லுங்கள் என்று கூறினார்.
அதற்கு மறுப்பு தெரிவித்த அதிமுக நிர்வாகிகள் இந்த கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி உள்பட அனைவரது பெயரையும் முதல் தகவல் அறிக்கையில் கொண்டு வந்ததற்கான ஆதாரத்தை காண்பிக்க வேண்டும். அதுவரை சண்முகத்தின் உறவினர்கள் உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் கூறி வருகிறார்கள் , அதனால் நீங்கள் முக்கிய குற்றவாளி உள்பட அனைவரையும் கைது செய்துவிட்டு வாருங்கள். அதன் பிறகு உடலை பெற்று செல்கிறோம் என்று கூறினர். இதனால், போலீசார் தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.