புதுப்பிக்கப்பட்ட மெரினா நீச்சல் குளம்: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
|ரூ.1.37 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட மெரினா நீச்சல் குளத்தை, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை,
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் மெரினா நீச்சல் குளம் உள்ளது. இந்த குளம் 3.5 முதல் 5 அடி வரை ஆழம் கொண்டுள்ளது. இந்த நீச்சல் குளத்தை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் பராமரிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டு இருந்த நிலையில், நீச்சல் குளத்தை முறையாக பராமரிக்காமல் சுகாதாரமற்று உள்ளதாக புகார் எழுந்தன. இதனைத்தொடர்ந்து மெரினா நீச்சல் குளம் கடந்த ஆண்டு மூடப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் ரூ.1.37 கோடி செலவில் புதுப்பொலிவோடு மறுசீரமைக்கப்பட்ட மெரினா நீச்சல் குளம் இன்று மாலை மீண்டும் திறக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று திறந்து வைத்தார்.
நாளை முதல் மெரினா நீச்சல் குளத்தை மக்கள் பயன்படுத்த அனுமதிக்கப்பட உள்ளனர். அதன்படி காலை 5:30 மணி முதல் மாலை 7.30 மணி வரை நீச்சல் குளம் திறந்திருக்கும். கழிவறை, உடைமாற்றும் அறைகள் போன்ற வசதிகள் என நீச்சல் குளம் மேம்படுத்தப்பட்டுள்ளது. மெரினா நீச்சல் குளத்தில் ஒரு மணி நேரத்திற்கு 50 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சென்னை மாநகராட்சி சார்பில் தரப்பட்டுள்ள கியூ.ஆர் கோடை பயன்படுத்தி பணம் செலுத்தினால் 10 சதவீதம் சலுகை அளிக்கப்படும். அதன்படி அவர்கள் கட்டணமாக ரூ.40 செலுத்தினால் போதும்.
மேலும் நீச்சல் குளத்தில் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. 12 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரூ. 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். அவர்களும் கியூ.ஆர் கோடை பயன்படுத்தி கட்டணம் செலுத்தினால் ரூ. 25 செலுத்தினால் போதும்.
இந்நிலையில் இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில், "சென்னை மெரினா கடற்கரையில் பலரும் விரும்பிச்செல்லும் நீச்சல் குளத்தைக் கழக அரசு ரூ.1 கோடியே 37 லட்சம் மதிப்பில் புதுப்பொலிவுடன் மேம்படுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த நவீன நீச்சல் குளத்தை இன்று திறந்து வைத்து, நீச்சல் பயிற்சியையும் தொடங்கி வைத்தோம்.
அங்குள்ள வசதிகளைப் பார்வையிட்ட பின்னர் பாதுகாப்பிற்கு எப்போதும் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென அதிகாரிகளை அறிவுறுத்தினோம். மேலும், இப்புதிய நீச்சல் குளத்தில் பயிற்சி மேற்கொள்வதற்கான இணையவழி முன்பதிவினையும் தொடங்கி வைத்து வாழ்த்தினோம்" என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.