காவிரியில் நீர்திறப்பு 1.20 லட்சம் கன அடியாக அதிகரிப்பு.. கிடுகிடுவென உயரும் மேட்டூர் அணை
|கடந்த 10 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 46 அடி உயர்ந்துள்ளது.
மேட்டூர்,
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கிருஷ்ண ராஜசாகர், கபினி ஆகிய 2 அணைகளும் முழு கொள்ளளவை எட்டின. அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. அணைகளுக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து உபரி நீர் அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது இரு அணைகளில் இருந்தும் 1.20 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதன் காரணமாக காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், ஒகேனக்கலில் தொடர்ந்து 11 ஆவது நாளாக பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவிரியில் நீர்திறப்பு அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 39,040 கன அடியில் இருந்து 45,598 கன அடியாக அதிகரித்துள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நேற்று ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 3.31 அடி உயர்ந்துள்ளது. தற்போது அணையில் நீர் இருப்பு 92.62 கன அடியாக உள்ளது. நீர் திறப்பு அதிகரிப்பால் கடந்த 10 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 46 அடி உயர்ந்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் நாளை 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.