பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஐ.டி. ஊழியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
|பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஐ.டி. ஊழியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை,
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் சிபிராஜ், ஐ.டி. ஊழியர். இவரின் திருமணத்துக்கு இணையதளம் மூலம் வரன் தேடினர். அப்போது கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருவீட்டினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அந்த பெண்ணை திருமணம் செய்ய, சிபிராஜின் பெற்றோர் மறுத்ததாக தெரிகிறது. இதுபோல் பெண் வீட்டாரும் சம்மதிக்கவில்லை.
ஆனாலும் சிபிராஜ், அந்த பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கி தொடர்ந்து பேசி வந்தார். மேலும் அவர், பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்வதாக அந்த பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறினார்.இதையடுத்து அவர், கடந்த 2020-ம் ஆண்டு கோவை வந்து அந்த பெண் தனியாக இருந்தபோது சந்தித்தார்.
அப்போது அவர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து அந்த பெண்ணிடம் கொடுத்தார். அதை குடித்த சிறிது நேரத்தில் அந்த பெண் மயங்கியதும் சிபிராஜ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மயக்கம் தெளிந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அப்போது அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி சிபிராஜ் சமாதானம் செய்தார்.
ஆனால் அவர் சில மாதங்கள் கழித்து அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்து விட்டதாக தெரிகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் துடியலூர் மகளிர் போலீசார் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ந் தேதி சிபிராஜ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தற்போது இந்த வழக்கு கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டது.
கோவை மகளிர் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.நந்தினி தேவி குற்றம் சாட்டப்பட்ட சிபிராஜுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து சிபிராஜ் சிறையில் அடைக்கப்பட்டார்.