< Back
மாநில செய்திகள்
ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் இன்று பகல் முழுவதும் நடை திறப்பு
மாநில செய்திகள்

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் இன்று பகல் முழுவதும் நடை திறப்பு

தினத்தந்தி
|
4 Aug 2024 2:27 AM IST

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் இன்று பகல் முழுவதும் நடை திறக்கப்பட உள்ளது.

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 7-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை 11 மணிக்கு தங்க கருட வாகனத்தில் ராமபிரான் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருள்கிறார்.

இரவு 8 மணிக்கு வெள்ளி தேரோட்டம் நடைபெறுகிறது. இன்று அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படுகிறது. பகல் 1 மணிக்கு சாத்தப்படாமல் பகல் முழுவதும் தரிசனத்திற்காக திறக்கப்பட்டு இருக்கும். இரவு 9 மணிக்கு பிறகுதான் நடை சாத்தப்படும் என கோவில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆடி திருக்கல்யாண திருவிழாவில் 8-ம் திருநாளான நாளை (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு மேல் கோவிலில் இருந்து அம்பாள், தங்க குதிரை வாகனத்தில் திட்டக்குடி மேலத்தெரு மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனால் நாளை மாலை 4 மணியில் இருந்து இரவு வரையிலும் நடை திறப்பில் மாற்றம் செய்யப்பட்டு, பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், தீர்த்தமாடவும் அனுமதி இல்லை என கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆகஸ்ட் 12-ம் தேதி அன்று மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெறுவதால் மாலை 5 மணியில் இருந்து மாலை 7 மணிவரை கோவில் நடை சாத்தப்படும். ஆகஸ்ட் 14-ம் தேதி அன்று கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு செல்வதால் அதிகாலை 2:00 மணிக்கு நடை திறந்து 2:30 மணிமுதல் 3:00 மணிவரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்று 6:00 மணிக்கு கெந்தமாதன பர்வதம் செல்லும்போது நடை சாத்தப்பட்டு இரவு 10:00 மணிவரை நடை சாத்தப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்