புதுக்கோட்டை: திருமயம் கோட்டை பைரவர் கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம்
|அமித்ஷா வருகையை முன்னிட்டு திருமயம் கோட்டை பைரவர் கோவில் வளாகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புதுடெல்லி ,
புதுக்கோட்டை மாவட்டம், வைரவன்பட்டி பகுதியில் உள்ள காலபைரவர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக அமித்ஷா தமிழகம் வருகை தந்துள்ளார். இதற்காக தனி விமானம் மூலம் வாரணாசியில் இருந்து திருச்சி வந்தடைந்த அவர், ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கானாடுகாத்தானுக்குச் சென்றார். அங்கிருந்து சாலை வழியாக திருமயம் கோட்டை பைரவர் கோவிலுக்கு வருகை தந்தார்.
அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார். அப்போது சாமிக்கு விசேஷ பூஜைகள், அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அமித்ஷாவுடன் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, பா.ஜனதா நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அமித்ஷா வருகையை முன்னிட்டு திருமயம் கோட்டை பைரவர் கோவில் வளாகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன், பக்தர்கள் தரிசனத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பைரவர் கோவிலில் சாமிதரிசனம் செய்துவிட்டு திருப்பதிக்கு செல்லும் அமித்ஷா, நாளை ஏழுமலையானை தரிசனம் செய்ய உள்ளார்.