ஆம்ஸ்ட்ராங் கொலை: சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை - செல்வப்பெருந்தகை
|ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த உண்மையான கைதிகளை கைது செய்ய வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் அதாவது ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூர், செம்பியம் பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் இப்போது பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி அஞ்சலி செலுத்தினார். அதேபோல் பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையும் அஞ்சலி செலுத்தினார்.
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் பேசிய அவர், "தலித் மக்களின் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். கிராமப்புற பகுதியில் வாழ்ந்து வரும் தலித் இளைஞர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங்-ஐ கொலை செய்த உண்மையான கைதிகளை கைது செய்ய வேண்டும்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை. தமிழக போலீசாரின் விசாரணையே போதும். உளவுப் பிரிவு போலீசாரை பலப்படுத்த வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கவலை அளிக்கும் வகையில் உள்ளது" என்று செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.