பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை தேர்தல் விதிமீறலா? - கலெக்டர் விளக்கம்
|பிரதமர் மோடி, ஆன்மிகத் தலங்களுக்கு சென்று தியானம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
குமரி,
நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் இறுதிக்கட்டமான 7-வது கட்ட தேர்தல் 1-ந் தேதி நடைபெறுகிறது. 4-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் முடிவடையும் நேரத்தில் பிரதமர் மோடி, ஆன்மிகத் தலங்களுக்கு சென்று தியானம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அதேபோல நாடாளுமன்ற தேர்தல் நிறைவடையும் நிலையில் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை, தியானம் செய்வதற்கு ஏற்ற இடமாக தேர்வு செய்துள்ளார். இதற்காக பிரதமர் மோடி இன்று (வியாழக்கிழமை) மாலை 4.35 மணிக்கு கன்னியாகுமரிக்கு வருகிறார்.
பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்கிறார். அங்கு விவேகானந்தர் சிலைக்கு மரியாதை செலுத்தி விட்டு தியான மண்டபத்துக்கு சென்று மாலை 6 மணி அளவில் தியானத்தை தொடங்குகிறார். 3 நாட்கள் அங்கேயே தங்கியிருந்து தியானம் செய்ய உள்ளார். இதற்காக விவேகானந்தர் மண்டபத்தில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி 3 நாட்கள் தியானம் மேற்கொள்வது அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. பிரதமரின் தியானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், தி.மு.க. தேர்தல் கமிஷனில் புகார் தெரிவித்துள்ளது. மேலும் பிரதமரின் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது என கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடி வருகை குறித்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ஸ்ரீதர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "பிரதமர் வருவது தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல. பிரதமரின் வருகையும், தியானமும் தனிப்பட்ட நிகழ்வு என்பதால் அனுமதி கோரப்படவில்லை. தனியார் பராமரிப்பில் உள்ள இடத்திற்கு தனிப்பட்ட நிகழ்விற்கு வருவதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறத் தேவையில்லை. தேர்தல் விதிமுறைப்படி பரப்புரை மேற்கொண்டாலோ அல்லது கூட்டம் கூட்டினாலோ நடவடிக்கை எடுக்கலாம்." என விளக்கமளித்தார்.