விலை உயர்வு: தக்காளியை அரசே கொள்முதல் செய்து விற்க வேண்டும் - ராமதாஸ்
|டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாமல் அரசு தோல்வி அடைந்துவிட்டதாக ராமதாஸ் கூறியுள்ளார்.
திண்டிவனம்,
திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
தக்காளி, வெங்காயத்தின் விளைச்சல் குறைந்துள்ளதால் அதன் விலை உயர்ந்துள்ளது. தக்காளி கிலோ ரூ120-க்கும், வெங்காயம் ரூ. 80-க்கும் உயர்ந்துள்ளது. தீபாவளியையொட்டி இதன் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு மொத்தமாக கொள்முதல் செய்து ரேஷன் கடை மூலம் குறைந்த விலையில் விற்க வேண்டும்.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாமல் அரசு தோல்வி அடைந்துவிட்டது. வரும் 15-ந் தேதி 1,000 இடங்களில் மருத்துவ முகாம் நடத்துவது போதுமானதல்ல. 5 ஆயிரம் முகாம்கள் நடத்தவேண்டும். இந்நோய்குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சாம்சங் ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. தொழிற்சங்கம் அமைக்க அரசும், நிறுவனமும் அங்கீகரிக்க வேண்டும். கட்சிகள் சார்ந்த தொழிற்சங்கம் அமைக்க அனுமதிக்க முடியாது என்று துணை முதல்-அமைச்சர் கூறியிருப்பது சரியல்ல. தொழிலாளர்களை விட சாம்சங் நிறுவனத்தின் நலனே பெரிது என அமைச்சர் உதயநிதி கூறியிருப்பது சரியல்ல.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கிரிக்கெட் விளையாடுவதை அனுமதிக்க முடியாது. அதை வீடியோ எடுத்த விடுதலை சிறுத்தைகள் நிர்வாகியை தாக்கியது கண்டிக்கதக்கது. கோவில்களில் தீட்ஷிதர்கள் கிரிக்கெட் விளையாட தனி மைதானத்தை அரசு அமைத்து கொடுக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.