< Back
மாநில செய்திகள்
பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் கைது - 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் கைது - 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

தினத்தந்தி
|
29 May 2024 11:36 PM IST

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மதுரை அண்ணாநகர் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை,

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் கடந்தாண்டு காஞ்சிபுரத்தில் பைக் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக பைக் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்து, மருத்துவமனையில் படுத்து கிடந்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் டிடிஎப் வாசன் புழல் சிறையில் இருந்து கடந்த நவம்பரில் ஜாமீனில் வெளியே வந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகள் ரத்து செய்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த சூழலில் சமீபத்தில் ஹைவேயில் கார் ஓட்டி சென்ற டிடிஎப் வாசன், தான் கம்பேக் கொடுத்து விட்டதாக தனது ரசிகர்களுக்காக வீடியோ வெளியிட்டிருந்தார்.

தொடர்ந்து வாசன் தனது கார் மூலமாக ஊர் ஊராக சுற்றி வருகிறார். அதனை கார் ஓட்டியபடி வீடியோவாக பதிவு செய்தும் வருகிறார்.

இந்நிலையில் பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மதுரை அண்ணாநகர் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடி செல்லும்போது செல்போன் பேசியபடி கார் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 15ந் தேதி இரவு 7.50 மணிக்கு மதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில் காரை அஜாக்கிரதையாகவும், கவன குறைவாகவும் பொது மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக செல்போனில் பேசி கொண்டே ஓட்டுவதும் அச்செயலை காரின் டேஸ்போர்டு கேமராவில் பதிவு செய்து யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து மதுரை மாநகர ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டரும், சமூக ஊடகப்பிரிவு கண்காணிப்பு அலுவலருமான மணிபாரதி அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், டி.டி எப்.வாசன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்நிலையத்திற்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினர். பின்னர் கைது செய்யப்பட்ட அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்