சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவிக்கு போலீஸ்காரர் பாலியல் தொல்லை
|பாலியல் புகாரில் சிக்கிய போலீஸ்காரர் கமலக்கண்ணனை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
சென்னை,
சென்னையை சேர்ந்த 20 வயது இளம்பெண் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.சம்பவத்தன்று இரவு 10.45 மணியளவில் சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள 2-வது நடை மேடையில் நண்பர் ஒருவருடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு சைதாப்பேட்டை போலீஸ்நிலையத்தில் தலைமை காவலராக வேலை பார்த்து வரும் கமலக்கண்ணன் என்பவர் மதுபோதையில் வந்ததாக தெரிகிறது. திடீரென அவர் நண்பருடன் இருந்த இளம்பெண்ணிடம் தவறாக பேசி செக்ஸ் தொல்லை கொடுத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அவரை எச்சரித்தார். ஆனாலும் போலீஸ்காரர் கமலக் கண்ணனின் தொல்லை எல்லை மீறியது. இதனை கண்டு அருகில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பயணிகள் திரண்டதால் போலீஸ்காரர் அங்கிருந்து சென்று விட்டார்.
இதுகுறித்து இளம்பெண் மாம்பலம் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். இதுபற்றி போலீசார் விசாரித்த போது போலீஸ்காரர் கமலக்கண்ணன், இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து அவர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவரை கைது செய்ய இன்ஸ்பெக்டர் வைரவன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதற்கிடையே பாலியல் புகாரில் சிக்கிய போலீஸ்காரர் கமலக்கண்ணனை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.