< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சாமியார்களிடம் போலீசார் சோதனை
மாநில செய்திகள்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சாமியார்களிடம் போலீசார் சோதனை

தினத்தந்தி
|
13 Oct 2024 3:40 PM IST

கிரிவலப்பாதையில் சில தினங்களுக்கு முன் கஞ்சா போதையில் சாமியார்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்தக் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். பக்தர்கள் கூட்டம் எப்போதும் அலைமோதும். இந்தக் கோவிலில் உள்ள கிரிவலப்பாதையில் 500-க்கும் மேற்பட்ட சாமியார்கள் அங்கேயே யாசகம் பெற்று வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், கிரிவலப்பாதையில் சாமியார்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது உண்டு. அந்தவகையில், கஞ்சா போதையில் அங்குள்ள கடைக்காரர்களை மிரட்டுவது, மக்களிடம் தகராறு செய்வது உள்ளிட்டவற்றில் ஈடுபடுவதாக சில சாமியார்கள் மீது புகார் எழுந்தது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக கஞ்சா போதையில் சாமியார்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும் இதில் கஞ்சா குடிக்க மறுத்த ஒரு சாமியாரை கத்தியால் தாக்கியதில் காயம் அடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

கஞ்சா போதையில் சாமியார்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் சம்பவம் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்த நிலையில், இன்று திருவண்ணாமலை நகர் மற்றும் கிரிவலப்பாதையில் தங்கியுள்ள சாமியார்களிடம் போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணையின்போது எங்கு இருந்து வருகிறீர்கள் எவ்வளவு நாட்களாக தங்கியுள்ளீர்கள் கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட பழக்கம் இருக்கிறதா உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியதோடு, கிரிவலப்பாதையில் தங்கியுள்ள சாமியார்களிடம் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள் உள்ளதா? என சோதனை மேற்கொண்டனர். அவர்களுக்கு கஞ்சா எங்கிருந்து கிடைக்கிறது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். திருவண்ணாமலையில் சாமியார்களிடம் கஞ்சா எதுவும் உள்ளதா என சோதனை நடைபெற்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்