< Back
மாநில செய்திகள்
சிறையில் அடைத்ததை எதிர்த்து ஜாபர் சாதிக் தாக்கல் செய்த மனு: தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

சிறையில் அடைத்ததை எதிர்த்து ஜாபர் சாதிக் தாக்கல் செய்த மனு: தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு

தினத்தந்தி
|
11 Sept 2024 11:25 PM IST

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தடைசட்ட வழக்கில் சிறையில் அடைத்ததை எதிர்த்து ஜாபர் சாதிக் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

சென்னை,

போதைப் பொருள் கடத்தல் வழக்கில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கடந்த மார்ச் 9-ந்தேதி கைது செய்தனர். இந்த வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் மத்திய அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

அந்த வழக்கிலும், ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், ஜாபர் சாதிக் வழக்கு தொடர்ந்தார். அதில், ''போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் வழங்கப்பட்ட சிறை மாற்ற உத்தரவின் அடிப்படையில் தன்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தது சட்டவிரோதம் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகி, "ஜாமீனில் விடுதலையான நபரை சட்டவிரோதமாக சிறையில் வைத்து கோர்ட்டு காவலில் அடைக்க பிறப்பித்த உத்தரவு அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. சட்டவிரோதமானது" என்று வாதிட்டார்.

பின்னர் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு குற்றவியல் வக்கீல் என்.ரமேஷ், "ஜாமீன் வழங்கப்பட்டு பிறகும் வெளியே விடாமல் சிறையில் வைத்திருந்ததற்காக வேண்டுமானால் திகார் சிறை நிர்வாகம் மீது மனுதாரர் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெறலாமே தவிர, அதற்காக சட்டவிரோத பணப்பரிமாற்றம் தடைச் சட்டத்தின் கீழ் பதிவான வழக்கில் அவரை சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர முடியாது. சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை ரத்தும் செய்ய முடியாது" என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "ஜாமீன் கிடைத்த பின்னரும், ஜாபர் சாதிக்கை வெளியில் விடாமல் சிறையில் வைத்திருந்தது சட்டவிரோதம். அதற்காக தனியாக நிவாரணம் கேட்டு வழக்கு தொடரலாம்" என்று தெரிவித்தனர். அத்துடன், சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஜாபர் சாதிக் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்