மக்களின் மகிழ்ச்சியும் எழுச்சியும் திமுகவின் வெற்றியை காட்டுகிறது: அமைச்சர் உதயநிதி பிரசாரம்
|1.16 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வருகிற 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், விக்கிரவாண்டியை அடுத்த திருவாமாத்தூர் கிராமத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது அவர் பேசியதாவது;
"மக்களின் மகிழ்ச்சியும், எழுச்சியும் திமுகவின் வெற்றியைக் காட்டுகிறது. கடந்த 3 வருடங்களில் முதல்வர் ஒவ்வொரு திட்டங்களையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார். தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல பெட்ரோல், பால் விலையை குறைத்தார். பெண்களுக்கான விடியல் பயணத்திட்டத்தில் 500 கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் விடியல் பயணத்திட்டத்தில் 8 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத்திட்டத்தால் பலரும் பயனடைந்து வருகின்றனர். 31 ஆயிரம் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 1.16 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.
விக்கிரவாண்டி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். முண்டியம்பாக்கம் முதல் கொசப்பாளையம், ஒரத்தூர் முதல் முண்டியம்பாக்கம் வரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கட்டப்படும் உயர்மட்ட பாலம் பணிகள் விரைந்து முடிக்கப்படும். வாதானூர் வாய்க்காலை தூர்வாரும் பணி விரைந்து முடிக்கப்பட்டு நீர் வழித்தடம் சரி செய்யப்படும்.
ரூ.62 கோடி மதிப்பில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, தேசிய நெடுஞ்சாலை அருகே மேம்பாலம் கட்டும் பணிகள் விரைந்து முடிக்கப்படும். புதிய வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கப்படும். விக்கிரவாண்டியில் உயர்மட்ட பாலம், சாலைப் பணிகள் விரைந்து முடிக்கப்படும்."
இவ்வாறு அவர் பேசினார்.