சமூகநீதிக்கு எதிரான திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: டாக்டர் ராமதாஸ் ஆவேசம்
|வன்னியர்களுக்கு சமூகநீதியை மறுக்க திமுக அரசு - ஆணையம் நடத்தும் நாடகம் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது பற்றி பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு வழங்கப்பட்ட காலக்கெடு ஜூலை 11-ம் தேதியுடன் முடிவடைந்து விட்டநிலையில், காலக்கெடுவை ஓராண்டுக்கு நீட்டித்து அரசு ஆணையிட்டிருக்கிறது. வன்னியர்களுக்கான சமூகநீதியை மறுக்க அரசும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் இணைந்து நடத்தும் இந்த நாடகம் கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை என்று 2022-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்டது. அதன்பின் 10 மாதங்கள் கழித்து 12.01.2023-ம் நாள் வன்னியர்களுக்கு உள் இடஓதுக்கீடு வழங்குவது பற்றி 3 மாதங்களில் பரிந்துரைக்கும்படி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தமிழக அரசு ஆணையிட்டது.
ஆனால், வழங்கப்பட்ட கெடுவுக்குள் வன்னியர் இட ஒதுக்கீடு குறித்த அறிக்கையை ஆணையம் தாக்கல் செய்யாத நிலையில், அடுத்தடுத்து 6 மாதங்கள், 3 மாதங்கள், 6 மாதங்கள் என மேலும் 15 மாதங்களுக்கு கூடுதல் காலக்கெடு வழங்கப் பட்டது. ஒட்டுமொத்தமாக வழங்கப்பட்ட 18 மாதக் கெடுவும் ஜூலை 11-ம் தேதியுடன் முடிந்துவிட்டது. இப்போதும் அறிக்கை தாக்கல் செய்யப்படாத நிலையில் தான் ஓராண்டு கூடுதல் கெடு வழங்கப்பட்டுள்ளது.
காலக்கெடுவை நீட்டிப்பதற்காக பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கூறியிருக்கும் காரணங்களும், அதை எதிர்கேள்வி கேட்காமல் அரசு ஏற்றுக் கொண்டிருப்பதும் தான் வியப்பளிக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இடம் பெற்றுள்ள அனைத்து சமூகங்களின் சாதிவாரி விவரங்கள் இல்லாததால், வன்னியர் உள் இட ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க இயலவில்லை என்றும், அந்தப் பணிகளை முடிக்க மேலும் ஓராண்டு காலக்கெடு தேவை என்று ஆணையம் கோரியதாகவும், அந்தக் கோரிக்கையை கவனமாக பரிசீலித்து காலக்கெடுவை ஓராண்டுக்கு நீட்டித்திருப்பதாகவும் தமிழக அரசு விளக்கமளித்திருக்கிறது.
வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க ஆணையத்திற்கு காலக்கெடு நீட்டிப்பதால் எந்த பயனும் இல்லை. இது அரசுக்கும், ஆணையத்திற்கும் தெரியும். ஆனாலும் நீ அடிப்பது போல அடி, நான் அழுவதைப் போல அழுகிறேன் என்று தமிழக அரசும், ஆணையமும் இணைந்து வன்னியர் சமூகநீதிக்கு எதிராக நாடகமாடுகின்றன. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிவிடக் கூடாது என்பதற்காக தரவுகள் இல்லை என்று கூறி அரசு ஏமாற்றுகிறது. அதன் நாடகத்திற்கு ஆணையமும் துணைபோகிறது.
வன்னியர்களால் வளர்ந்த திமுக, இப்போது வன்னியர்கள் மீது கொண்டிருக்கும் வஞ்சம் மற்றும் வன்மத்தின் காரணமாகவே உள் இட ஒதுக்கீடு வழங்க மறுக்கிறது. திமுகவின் இந்த நாடகங்களை உழைக்கும் பாட்டாளி மக்கள் நன்றாக அறிவார்கள். காலம் வரும் போது சமூகநீதிக்கு எதிரான, நன்றி மறந்த திமுகவுக்கு மறக்க முடியாத பாடத்தை தமிழக மக்கள் புகட்டுவார்கள் என்பது உறுதி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.