இனி ஒரு நிமிடத்தில் 'பட்டா'
|பொதுமக்கள் பட்டா எளிதாக பெறும் வகையிலான பணிகளை செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் ஒரு சொத்திற்கு பட்டா பெறுவது என்பது மிகுந்த சவாலாக இருக்கிறது. பணம் கொடுத்து வாங்கிய சொத்திற்கு வருவாய்த்துறையிடம் இருந்து பட்டா வாங்குவதற்குள் போதும், போதும் என்றாகிவிடுகிறது. இது தொடர்பாக முதல்-அமைச்சர் குறைதீர்க்கும் பிரிவிற்கும், மாவட்டங்களில் கலெக்டர் தலைமையில் நடைபெறும் குறைதீர்க்கும் கூட்டங்களிலும் அதிகளவு புகார் மனுக்கள் குவிகின்றன.
எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பட்டா எளிதாக பெறும் வகையிலான பணிகளை செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் அதற்கு தானே முன்னின்று சில ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.
அதன்படி, தற்போது பொதுமக்கள் எளிதாக பட்டா பெறும் வகையில் 3 நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதில் முதல் நடைமுறை எங்கிருந்தும், எந்த நேரத்திலும் இணையவழி சேவை ஆகும். ஒரு நிலத்திற்கான பட்டா, வரைபடம் ஆகியவற்றை பொதுமக்கள் https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற இணையதளம் மூலம் எளிதாக பெற்று கொள்ளவது ஆகும். எந்த அலுவலகத்திற்கும் சென்று கால்கடுக்க காத்திருக்க வேண்டியதில்லை. அதே போல் இந்த இணையதளம் மூலமே பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்.
2-வது நடைமுறை, பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக பொதுமக்கள் அளிக்கும் விண்ணப்பங்கள் மீது வரிசைப்படிதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டா மனுக்கள் 2 வகையாக பிரிக்கப்படுகிறது. ஒன்று நேரடியாக பெயர் மாற்றம் செய்ய வேண்டிய உட்பிரிவு இல்லாத நேரடி பட்டா. மற்றொன்று உட்பிரிவு செய்ய கூடிய பட்டா. அதாவது கூட்டு பட்டா அல்லது ஒரு சர்வே எண்ணில் பாதி நிலத்தை மட்டும் சர்வே செய்து அளந்து பிரித்து உட்பிரிவு செய்யக்கூடிய உட்பிரிவு பட்டா.
அதில் உட்பிரிவு இல்லாத பட்டா மாற்றம் மனுக்கள் மீது 16 நாட்களுக்குள் கட்டாயம் தீர்வு காணப்பட வேண்டும். உட்பிரிவு செய்ய வேண்டிய பட்டாவிற்கு 30 நாட்கள் வரை அவகாசம் எடுத்து கொள்ளலாம். ஆனால் இந்த 2 பிரிவு பட்டா மனுக்கள் மீதும் முதலில் வருபவர்களுக்கு முதலில் என்ற அடிப்படையில் வரிசைப்படி தான் பணிகள் செய்ய வேண்டும்.
செல்வாக்கு-பணம் இருப்பவர்களுக்கு முன்பும், அதெல்லாம் இல்லாதவர்களுக்கு பின்பும் பண்ண கூடாது. மனு கொடுக்கும் தேதி அடிப்படையில் தான் மனுவை வரிசைப்படி பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் சிறிய காரணங்களை சொல்லி மனுக்களை எக்காரணம் கொண்டும் நிராகரிக்க கூடாது. ஒருவேளை தவறாக மனுவை நிராகரித்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
3-வது நடைமுறை, ஒரு நிமிடத்தில் பட்டா வழங்கும் திட்டம். அதாவது ஒரு சொத்தை பத்திரப்பதிவுத்துறை மூலம் பத்திரப்பதிவு செய்தவுடன் ஒரு நிமிடத்தில் அவர்களுக்கு பட்டா வழங்கப்படும். ஏற்கனவே ஒரு சொத்தை பதிவு செய்தவுடன், அதற்கான பட்டா மாற்றம் மனு பத்திரப்பதிவு துறை மூலம் வருவாய்த்துறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த மனுவை கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தலைமையிடத்து துணை தாசில்தார், தாசில்தார் ஆகியோர் ஆய்வு செய்து அனுமதி கொடுக்கிறார்கள். அதன்பின் பட்டா மாற்றம் செய்யப்படும். அதனால் அதன் மூலம் கால விரயம் மட்டுமின்றி லஞ்சமும் தலைவிரித்தாடுகிறது.
ஆனால் 'ஒரு நிமிட பட்டா திட்டம்' மூலம் பத்திரப்பதிவு செய்தவுடன் தானியங்கி முறையில் தானாக பட்டா மாற்றம் செய்யப்படும். இனி வருவாய்த்துறைக்கு அனுப்பப்படாது. ஆனால் இந்த திட்டம், உட்பிரிவு இல்லாத நேரடி பட்டா மாற்றத்திற்கு மட்டும் பொருந்தும். அதாவது சொத்தினை விற்பவர்கள் பெயரில் பட்டா இருந்து, அந்த பட்டாவில் உள்ள சொத்து அளவினை முழுமையாக அப்படியே வாங்குபவர்களுக்கு உடனடி பட்டா வழங்கப்படும். அதற்கான பணிகள் சுமார் 90 சதவீதம் முடிந்து விட்டது. சில இடங்களில் சோதனை அடிப்படையில் தானியங்கி முறையில் ஒரு நிமிட பட்டாவும் வழங்கப்படுகிறது. விரைவில் பத்திரப்பதிவு செய்தவுடன் ஒரு நிமிடத்தில் பட்டா வழங்கும் நடைமுறை முழு அளவில் செயல்படுத்தப்படும்.
இந்த 3 நடைமுறைகளால் தமிழகத்தில் பட்டா வழங்கும் சேவையில் மிகப்பெரும் மாற்றம் ஏற்பட போகிறது. எனவே பொதுமக்கள் இனி எளிதாக பட்டா பெறமுடியும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நேரடி கண்காணிப்பில் இந்த பட்டா நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதால் அதன் முழு பலனும் மக்களுக்கு விரைவில் கிடைக்கபோகிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.