< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து - நடந்தது என்ன?
மாநில செய்திகள்

திருவள்ளூர் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து - நடந்தது என்ன?

தினத்தந்தி
|
11 Oct 2024 11:31 PM IST

திருவள்ளூர் அருகே நிகழ்ந்த எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்று தெற்கு ரெயில்வே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னை,

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு இன்று காலை 10.30 மணிக்கு பாக்மதி எக்ஸ்பிரஸ் (12576 எண் கொண்ட) ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் ஜோலார்பேட்டை, அரக்கோணம், பெரம்பூர் வழியாக கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் வெள்ளிக்கிழமை இரவு சென்றுக்கொண்டிருந்தது. இந்தநிலையில் வெள்ளிக்கிழமை (11ம் தேதி)இரவு 8.27 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரெயில் நிலையம் அருகே மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் இந்த ரெயில் வந்தபோது, அங்கு ஏற்கெனவே நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது திடீரென மோதியது. இதில் அந்த ரெயிலில் 13 பெட்டிகள் வரை தடம்புரண்டதாக தெரிகிறது. இந்தவிபத்தில், உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும், 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் ரெயில்வே அதிகாரிகள், திருவள்ளூர் மாவட்ட அரசு அதிகாரிகள், ரெயில்வே போலீசார், ஆர்.பி,எப். போலீசார் அங்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தடம்புரண்ட பெட்டிகளில் இருந்து காயமடைந்த பயணிகளை மீட்டு, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விபத்து நடைபெற்ற இடத்துக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மீட்பு பணியில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வருகின்றனர். 22-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது. மீட்கப்பட்ட பயணிகள் அருகில் உள்ள கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்னர்.

இந்த விபத்திற்கு தவறான சிக்னல் அளிக்கப்பட்டதே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பச்சை சிக்னல் கொடுக்கப்பட்டும் மெயின் லைனில் ரெயில் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரவு 8.27 மணியளவில் பச்சை சிக்னல் கொடுக்கப்பட்டதால் கவரைப்பேட்டை ரெயில் நிலையம் நோக்கி ரெயில் சென்றுள்ளது. 109 கி.மீ வேகத்தில் சென்ற ரெயிலை லோகோ பைலட் லூப் லைனில் செல்லும்போது 90 கி.மீ வேகத்திற்கு குறைத்ததாகவும் கூறப்படுகிறது. பிரதான லைனில் இருந்து லூப் லைன் சென்ற ரெயில் அங்கு ஏற்கனவே நின்றிருந்த சரக்கு ரெயிலின் பின்புறம் மோதியுள்ளது. லூப் லைனில் நுழைந்தபோது நின்று கொண்டிருந்த சரக்கு ரெயிலில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தை தொடர்ந்து இரு மார்க்கத்திலும் ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரெயில் விபத்து தொடர்பாக 044-2535,044 2435 , 4995 ஆகிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ரெயில் விபத்து குறித்து ரெயில்வே போலீசார் முதற்கட்ட விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். ஒடிசா ரெயில் விபத்தைபோல இந்த ரெயில் விபத்தும் சிக்னல் கோளாறால் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்