< Back
மாநில செய்திகள்
தமிழ்நாட்டை விட்டு வெளியேறி ஆந்திராவில்  தஞ்சம் அடைய போகிறோம்: ஏகனாபுரம் கிராம மக்கள் அறிவிப்பு
மாநில செய்திகள்

தமிழ்நாட்டை விட்டு வெளியேறி ஆந்திராவில் தஞ்சம் அடைய போகிறோம்: ஏகனாபுரம் கிராம மக்கள் அறிவிப்பு

தினத்தந்தி
|
16 Jun 2024 6:38 AM IST

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முனைப்பு காட்டிவரும் நிலையில் தமிழ்நாட்டை விட்டு வெளியேற போவதாக ஏகானபுரம் கிராம மக்கள் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சீபுரம்,

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முனைப்பு காட்டிவரும் நிலையில் தமிழ்நாட்டை விட்டு வெளியேறி, ஆந்திர மாநில அரசிடம் அகதிகளாக தஞ்சம் அடைய சித்தூர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க போவதாக கிராம மக்களும், போராட்ட குழுவினரும் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டம், பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5 ஆயிரத்து 746 ஏக்கர் பரப்பளவில் சென்னைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய விமான நிலையமாக பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டது. அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. விமான நிலையம் அமைக்கும் திட்டத்தால் நீர்நிலைகள், குடியிருப்புகள், விளை நிலங்கள் பாதிக்கப்படும் என பாதிக்கப்படக்கூடிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இந்த திட்டத்தை எதிர்த்து 690 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம், பேரணி, உண்ணாவிரதப் போராட்டம் மொட்டை அடித்து போராட்டம் விவசாய நிலங்களில் இறங்கி கதறி அழுது போராட்டம், பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பாமல் புறக்கணிப்பு, கிராம சபை கூட்டத்தில் தீர்மானம், கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு மற்றும் நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.

இந்த நிலையிலும் மத்திய, மாநில அரசுகள் கிராம மக்களின் போராட்டங்களுக்கு செவி சாய்க்காமல் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. தமிழக அரசு தொழில் முதலீட்டு கழகம் மூலம் 5 கிராமங்களில் நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்புகளை நாளிதழில் வெளியிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விவசாயத்தையும், நீர்நிலைகளையும் காக்க போராடி வரும் விவசாய மக்களின் உணர்வுகளை மதிக்காமல் நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளதாக கருதி ஏகனாபுரம் கிராம மக்களும், போராட்டக் குழுவினரும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.

அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடாமல் நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பினை வெளியிடும் தமிழ்நாடு அரசை கண்டிக்கிறோம். விவசாயிகள் வாழ தகுதி இல்லாத தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதை பெருமையாக கருதி, சொந்த மண்ணில் வாழ்வதை விட, மொழி தெரியாத அன்னிய ஆந்திர மாநிலத்தில் அடிமையாக வாழ்வது என ஒட்டுமொத்த கிராம மக்களும் முடிவு செய்து உள்ளோம். எனவே பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்கம் மற்றும் ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் விவசாய நல கூட்டமைப்பு போராட்ட குழுவினர் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்ட கலெக்டரை சந்தித்து வாழ்விடம் கேட்க முடிவுசெய்துள்ளோம்

ஆந்திர மாநிலத்தை நோக்கி கண்ணீர் பயணம் மேற்கொள்ளும் கிராம மக்கள், போராட்ட குழுவினரை வழி அனுப்ப ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் அனைவரும் வருகின்ற 24-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9.30 மணியளவில் ஏகனாபுரம் டாக்டர் அம்பேத்கர் சிலை அருகே திரளாக கலந்துகொள்ள வேண்டுமென கேட்டு அன்புடன் அழைப்பு விடுக்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம மக்கள் அறிவித்துள்ள இந்த திடீர் முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்