< Back
மாநில செய்திகள்
சேரன் விரைவு ரெயிலில் பயணிகளை தாக்கிய துணை ராணுவ படையினர்
மாநில செய்திகள்

சேரன் விரைவு ரெயிலில் பயணிகளை தாக்கிய துணை ராணுவ படையினர்

தினத்தந்தி
|
8 Jun 2024 4:36 PM IST

எங்களையே கேள்வி கேட்கிறீர்களா எனக்கூறி பயணிகளை துணை ராணுவ படையினர் தாக்கியுள்ளனர்.

சென்னை,

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு நேற்று இரவு சேரன் விரைவு ரெயில் புறப்பட்டது. ரெயிலின் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் 20க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படையினர் ஏறியுள்ளனர்.

அவர்கள் ரெயிலில் இருந்தபடியே மது அருந்திவிட்டு போதையில் ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். ராணுவப்படை வீரர்களால் தூக்கம் இல்லாமல் அவதியடைந்து வந்த பயணிகள், அவர்களிடம் தெரிவித்தபோது அவர்கள் பயணிகளை மிரட்டியுள்ளனர். மேலும் எங்களையே கேள்வி கேட்கிறீர்களா எனக்கூறி ஆபாச வார்த்தைகளை பேசியதுடன், காலணிகளை கொண்டு பயணிகளை தாக்கியுள்ளனர். இதில் இரு பயணிகள் காயமடைந்தனர். மேலும், துப்பாக்கியை காட்டியும் அவர்கள் பயணிகளை மிரட்டியுள்ளனர்.

இதனால் கோபமடைந்த பயணிகள், ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர். தொடர்ந்து, ராணுவ படையினர் நடந்த விதம் குறித்து அங்கு வந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் பயணிகள் புகார் தெரிவித்தனர். அத்துடன், துணை ராணுவப்படை வீரர்களை ரெயிலில் இருந்து இறக்கி விடுமாறும் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து ரகளையில் ஈடுபட்ட துணை ராணுவப்படை வீரர்களை ரெயில்வே போலீசார் ரெயிலில் இருந்து இறக்கிவிட்டனர். தொடர்ந்து ரெயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்