பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு: இயக்குனர் மோகன் மீது மேலும் ஒரு புகார்
|இயக்குனர் மோகன் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னை,
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் மோகன் ஜி. இவர் பழைய வண்ணாரப்பேட்டை, திரவுபதி, ருத்ர தாண்டவம், பகாசுரன் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக திரைப்பட இயக்குனர் மோகன் ஜி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அதில், துளி கூட மனசாட்சி இல்லாமல் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையில் விளையாடி இருக்கிறார்கள். இதை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பஞ்சாமிர்தத்தில் கூட சில பொருட்களை கலந்ததாக தகவல்கள் கூறப்பட்டன. ஆனால் அதற்கு சாட்சிகள் இல்லை என்று கூறியிருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் திருச்சி உள்ளிட்ட இடங்களில் திரைப்பட இயக்குனர் மோகன் ஜி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் சென்னைக்கு சென்று வீட்டில் இருந்த திரைப்பட இயக்குனர் மோகன் ஜியை நேற்று கைது செய்தனர்.
பின்னர் அவரை திருச்சிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவரை திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது சொந்த ஜாமீனில் விடுவிப்பதாக நீதிபதி தெரிவித்தார். மேலும் மோகன் ஜி 2 நாட்களில் இருநபர் ஜாமீன் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையில் மோகன் ஜி மீது சமயபுரம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்து தொடர்பாக திரைப்பட இயக்குனர் மோகன் ஜி மீது பழனி கோவில் பஞ்சாமிர்த பிரிவு கண்காணிப்பாளர் பாண்டியராஜ் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் மோகன் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.