தண்ணீர் தொட்டியில் வீசி மகளை கொன்ற பெயிண்டர்... அதிர்ச்சியில் மற்றொரு குழந்தையுடன் தாய் தற்கொலை
|கோவையில் தண்ணீர் தொட்டியில் மகளை வீசி பெயிண்டர் கொலை செய்தார். இந்த அதிர்ச்சியில் மற்றொரு குழந்தையுடன் தாய் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை,
கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (40 வயது). பெயிண்டர். இவருடைய மனைவி புஷ்பா (35 வயது). இவர்களுக்கு ஹரிணி (9 வயது), சிவானி (3 வயது) ஆகிய 2 குழந்தைகள் இருந்தனர். தங்கராஜூக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. கடந்த 4 மாதங்களாக சரிவர வேலைக்கு செல்லாமல் குடிபோதையில் புஷ்பாவிடம் தகராறு செய்து வந்தார்.
அதை அவர் சகித்துக்கொண்டு வீட்டு வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்தார். ஆனால் அவரிடமும் மது குடிக்க பணம் கேட்டு தங்கராஜ் தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் தங்கராஜ் நேற்று காலை அக்கம்பக்கத்தினரிடம் சென்று, தண்ணீர் தொட்டிக்குள் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகள் இறந்து கிடப்பதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்வையிட்டனர்.
அப்போது புஷ்பா மற்றும் 2 குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி இறந்ததும், அதில் ஹரிணி உடலை மட்டும் தங்கராஜ் வெளியே எடுத்து இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் தண்ணீர் தொட்டிக்குள் கிடந்த புஷ்பா மற்றும் சிவானி ஆகியோரது உடல்களை வெளியே எடுத்தனர். இதற்கிடையில் தங்கராஜ் எந்த சோகமும் இல்லாமல் இருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
விசாரணையின்போது அவர் போலீசில் கூறியதாவது:-
குடிபோதையில் நேற்று முன்தினம் இரவு எனது மனைவி புஷ்பாவிடம் தகராறில் ஈடுபட்டேன். இதில் ஆத்திரம் அடைந்த நான், மூத்த மகள் ஹரிணியை வீட்டின் பின்புறம் உள்ள 10 அடி ஆழ தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்தேன்.
அவளை காணாமல் தேடிய புஷ்பா, தண்ணீர் தொட்டிக்குள் மகள் பிணமாக கிடப்பதை கண்டு கதறி அழுதார். அத்துடன் 2-வது மகள் சிவானியை அதே தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்துவிட்டு, தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார். குடிபோதையில் இருந்ததால் கண்டு கொள்ளாமல் வீட்டில் அப்படியே படுத்து தூங்கி விட்டேன். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது, 3 பேரும் தண்ணீர் தொட்டிக்குள் பிணமாக கிடந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.
அவர் மீது கொலை, தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.