< Back
மாநில செய்திகள்
எங்கள் போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை - செல்வப்பெருந்தகை
மாநில செய்திகள்

'எங்கள் போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை' - செல்வப்பெருந்தகை

தினத்தந்தி
|
5 Jun 2024 6:47 AM IST

இனிவரும் நாட்களில் மக்கள் உரிமைக்காகவும், அரசியல் சாசனத்தை பாதுகாக்கவும் இணைந்து போராட வேண்டும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்தியாவில் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில், புதிய ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் பா.ஜனதா தனித்து 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 'இந்தியா' கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளையும் சேராத கட்சிகள் 17 இடங்களை பிடித்துள்ளன. எனவே மத்தியில் அமையும் புதிய ஆட்சி கூட்டணி ஆட்சியாகவே இருக்கும்.

இதனிடையே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் 'இந்தியா' கூட்டணி வெற்றி வாகை சூடியிருக்கிறது. இந்நிலையில் போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும், இனிவரும் நாட்களில் மக்கள் உரிமைக்காகவும், அரசியல் சாசனத்தை பாதுகாக்கவும் நாம் அனைவரும் தொடர்ந்து போராட வேண்டும் என்றும் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"18-வது மக்களவை தேர்தலில் பொதுமக்களின் விருப்பத்தை நாங்கள் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். இது மக்களின் வெற்றி. இது ஜனநாயகத்தின் வெற்றி. இம்முறை எந்த ஒரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மையை பொதுமக்கள் வழங்கவில்லை. ஒரு நபர் - ஒரு முகம் என்ற பெயரில் பா.ஜ.க. மக்களிடம் ஓட்டு கேட்டது. தேர்தல் முடிவு மோடிக்கு எதிரானது என்பது இப்போது தெளிவாகிவிட்டது. இது அவர்களின் அரசியல் மற்றும் தார்மீக தோல்வி.

காங்கிரஸ் கட்சியும் நமது 'இந்தியா' கூட்டணியும் மிகவும் கஷ்டமான சூழலில் தேர்தலில் போட்டியிட்டதை நீங்கள் அறிவீர்கள். பா.ஜ.க. அரசு இயந்திரம் ஒவ்வொரு முறையும் தடைகளை உருவாக்கியது. வங்கிக் கணக்குகளை பறிமுதல் செய்வதில் இருந்து, பல்வேறு தலைவர்களுக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்யப்பட்டது.

இருந்தும் காங்கிரஸ் கட்சியின் பிரசாரம் ஆரம்பம் முதல் இறுதி வரை சாதகமாகவே இருந்தது. பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் அவலநிலை, அரசியலமைப்பு நிறுவனங்களை தவறாகப் பயன்படுத்துதல் போன்ற பிரச்சினைகளை மையப் பிரச்சினைகளாக ஆக்கினோம். இப்பிரச்சினைகளில் பெரும் அளவிலான மக்கள் எம்முடன் இணைந்து ஆதரவளித்தனர். பிரதமரின் அவதூறு பிரச்சாரம் வரலாற்றில் நீண்ட காலமாக நினைவில் நிற்கும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து மோடி பரப்பிய பொய்யை பொதுமக்கள் புரிந்து கொண்டனர்.

ராகுல் காந்தியின் 'இந்திய ஒற்றுமை பயணம்' மற்றும் 'இந்திய ஒற்றுமை நியாய பயணம்' ஆகிய இரண்டு பயணங்களிலும், லட்சக்கணக்கான மக்களை சந்தித்து, மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து, அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டார் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன். 5 தரப்பிலான மக்களுக்கு வாக்குறுதிகள் என்ற முறையில் 5 நியாயங்கள் மற்றும் 25 உத்தரவாதங்களை உருவாக்கினோம். எங்களின் உத்திரவாதம் ஒவ்வொரு வீடாக சென்றது.

இதைத் தவிர பா.ஜ.க. தலைமையின் ஆணவத்தால் ஒரு முக்கியமான விஷயம் நடந்தது. அவர்கள் படிப்படியாக அனைத்து அரசியலமைப்பு நிறுவனங்களையும் சட்டவிரோதமாக கைப்பற்ற முயன்றனர். பின்னர் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கினர். அவர்களுக்கு அஞ்சியவர்கள் அவர்களுடன் இணைந்தனர். அடிபணியாதவர்கள், அவர்களின் கட்சியை உடைத்தார்கள் அல்லது சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

மோடிக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கிடைத்தால், அடுத்த தாக்குதல் அரசியல் சாசனத்தின் மீதுதான் இருக்கும் என்று மக்கள் நம்பினர். புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில்தான் மக்கள் இதற்கான ஆதாரத்தை காண்பார்கள். இந்த சதியில் இனி பா.ஜ.க. வெற்றி பெறாது என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த சந்தர்ப்பத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மக்கள் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு நான் குறிப்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாடு முழுவதும் இரவு பகலாக பிரசாரம் செய்து காங்கிரஸ் பேரியக்கத்தை வலுவான நிலைக்கு கொண்டு வந்தார்கள்.

இறுதியாக, 'இந்தியா' கூட்டணியின் அனைத்து சக ஊழியர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் ஒரே குரலில் ஒன்றாக இருந்தார்கள். அனைவரும் இணைந்து பிரசாரம் செய்து ஒருவருக்கொருவர் உதவி செய்தார்கள். நமது ஆயிரக்கணக்கான செயல்வீரர்கள் நல்ல ஒருங்கிணைப்புடன் பணியாற்றினார்கள்.

உங்கள் அனைவருக்கும் நன்றி! எங்கள் போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இனிவரும் நாட்களில் மக்கள் உரிமைக்காகவும், அரசியல் சாசனத்தை பாதுகாக்கவும், நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், எல்லைப் பாதுகாப்புக்காகவும் நாம் அனைவரும் தொடர்ந்து போராட வேண்டும். நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். எதிர்க்கட்சிகளின் பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அவை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும். வரும் நாட்கள் முக்கியமானதாக இருக்கும். நாங்கள் உங்களிடம் தொடர்ந்து பேசுவோம். நன்றி! வாழ்க அரசியலமைப்பு, ஜெய் ஹிந்த்!"

இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்