வாஞ்சையோடு என்னை அணைத்துக்கொள்ளும் நம் உறவுகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
|அமெரிக்க உறவுகளுக்கு அன்பும் நன்றியும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார்.. இப்பயணத்தின்போது சான்பிரான்சிஸ்கோவில் கடந்த மாதம் 29-ந் தேதி அன்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதனையடுத்து கடந்த 30-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு, கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, ஓமியம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையில் அமெரிக்கா சென்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள், அங்குள்ள தமிழ் சங்கத்தினர் செல்லும் இடங்களில் எல்லாம் உற்சாகமாக வரவேற்பு அளித்து வருகின்றனர். இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
"அன்னை மண்ணைப் பிரிந்து அயலகத்தில் இருக்கிறேன் என்ற உணர்வே எழாத வகையில் வாஞ்சையோடு என்னை அணைத்துக்கொள்ளும் நம் உறவுகள். தங்களது உழைப்பாலும் - அறிவாலும் வாய்ப்புகளை அமைத்துக் கொண்டு அமெரிக்க நாட்டில் உயர்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு அன்பும் நன்றியும்" என்று தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க பயணம் குறித்த வீடியோ ஒன்றையும் முதல்-அமைச்சர் வெளியிட்டுள்ளார்.