< Back
மாநில செய்திகள்
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
மாநில செய்திகள்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
19 Sept 2024 11:53 AM IST

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள குகன்பாறை என்ற இடத்தில் பாலமுருகன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பட்டாசு ஆலையில் இன்று காலை வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பட்டாசு தயாரிப்பதற்கான மருந்து கலவை தயார் செய்யும் பணியின்போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் பட்டாசு தொழிற்சாலையின் ஒரு அறை முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானது. வெடி விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் வெடி விபத்தில் சிக்கிய சிலரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தில் கோவிந்தராஜ் என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குருமூர்த்தி என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உராய்வு ஏற்பட்டு இந்த வெடி விபத்து நிகழ்ந்ததா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்