"காந்தியின் உயிர்மூச்சு கொள்கையில் ஒன்று மதுவிலக்கு.." - திருமாவளவன்
|மதுவிலக்கே ஒற்றை கோரிக்கை, இது கவுதம புத்தர் முன்வைத்த முழக்கம் என்று மது ஒழிப்பு மகளிர் மாநாட்டில் திருமாவளவன் தெரிவித்தார்.
உளுந்தூர்பேட்டை,
தமிழ்நாடு உள்பட தேசிய அளவில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும், தேசிய மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இன்று மாலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி, மாநாட்டை தொடங்கி வைத்தார். இதில் மது மற்றும் போதைப் பொருள்களைத் தடுக்கும் வகையில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் இந்த மாநாட்டில் பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
இதனைத்தொடர்ந்து மாநாட்டில் பேசிய திருமாவளவன், "மது ஒழிப்பு மாநாடு அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்ல. மதுவிலக்கே ஒற்றை கோரிக்கை. இது கவுதம புத்தர் முன்வைத்த முழக்கம். சாதி, மத பெருமையை நாங்கள் பேசக்கூடியவர் அல்ல. பகவான் புத்தரின் பெருமைகளை பேசக்கூடியவர்கள். மதுவுக்கு அடிமையாகியிருந்தால் பெரியார், அம்பேத்கர் போன்றவர்கள் கிடைத்திருக்க மாட்டார்கள்.
புத்தரோ, இயேசுவோ, இஸ்லாமோ அல்லது மகான்களோ மதுவை ஆதரிக்கவில்லை. கள் உண்ணாமையை வடலூர் வள்ளலாரும் அய்யா வைகுண்டரும் வலியுறுத்தினர் மது ஒழிப்பு என்ற ஒற்றைக் கோரிக்கையுடன் மாநாடு நடத்தியது விடுதலைச் சிறுத்தைகள்தான். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய மது ஒழிப்பு மாநாடு தாக்கத்தை ஏற்படுத்தும்
மாமனிதர்களின் கொள்கையை உள்வாங்கியவன். ஞான வம்சத்தில் வந்ததால் மதுவிலக்கு பற்றிப் பேசுகிறேன். மதுவை தொடாமல் ஒரு மதம் பின்பற்றி வருகிறது என்றால் அது இஸ்லாமிய மதம்தான். திடீரென மதுவிலக்கு பற்றி பேசவில்லை. மது ஒழிப்பு மாநாட்டில் அரசியல் உள்நோக்கம் இல்லை. கிராமப்புறங்களில் பல்வேறு வடிவங்களில் போதைப் பொருள் புழக்கத்தில் உள்ளது. இளம் வயதில் போதைப் பொருளுக்கு அடிமையாவதால் மனிதவளம் பாழாகிறது.
தேசிய மதுவிலக்குக் கொள்கை மூலம் நாடு முழுவதும் மது விலக்கு வேண்டும் என மத்திய அரசிடமும், மாநிலத்தில் மது விலக்கு வேண்டும் என தமிழக அரசிடமும் கோரிக்கை வைக்கிறோம். தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கை வேண்டும் என்றார் கலைஞர் கருணாநிதி. மதுக்கடைகளை மூட முடியாது என மு.க. ஸ்டாலின் கூறவில்லை. நிர்வாகரீதியில் சிக்கல் இருப்பதாகவே கூறினார்.
மதுவிலக்கில் திமுகவுக்கும் கொள்கை அளவில் உடன்பாடு உள்ளது. மது ஒழிப்பு மாநாட்டிற்கு லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு வந்திருக்கிறார்கள். மது வேண்டாம் எனக்கூறும் அனைவரின் ஆதரவும் நமக்கு தேவை. இந்த மாநாடு அரசியலுக்காகவோ, தேர்தலுக்காகவோ இல்லை " என்று அவர் கூறினார்.
இந்த மாநாட்டில், திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆனி ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தேசிய துணைத் தலைவர் உ.வாசுகி மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள்:-
* அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 47-ல் கூறியுள்ளவாறு மது விலக்கை தேசிய கொள்கையாக வரையறுக்கவும் சட்டத்தை இயற்ற வேண்டுமெனவும் மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
* மாநில அரசுகள் வருவாய் பற்றாக்குறை காரணமாகவே மதுக்கடைகளை திறப்பதாக கூறுகின்றன. இந்த நிலையை தவிர்ப்பதற்கு தற்போது மத்திய அரசால் வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி. இழப்பீட்டு செஸ் வரியை, 'மதுவிலக்கு இழப்பீட்டு செஸ் வரியாக வசூலித்து அத்தொகை முழுவதையும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு பிரித்தளிக்க மத்திய அரசு முன்வரவேண்டும் என இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.
* மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வைத் தீர்மானிக்கும் போது மதுவிலக்கு என்பதையும் சேர்த்து மதுவிலக்கால் வருவாய் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி பகிர்வை செய்வதற்கு 16-வது நிதி குழுவுக்கு ஒன்றிய அரசு வழிகாட்டுதல் அளிக்க வேண்டும்.
* போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு நிதி உதவி அளிக்கும் திட்டம் ஒன்றை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் மிகக் குறைந்த நிதியே மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. அதிலும்கூட தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 50 கோடி ரூபாயாக இந்த நிதியை உயர்த்தி வழங்கவேண்டும்.
* 70 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது மதுவினால் ஏற்படும் கேடுகள் அதிகரித்துள்ளன. மனிதவளம் தேசிய அளவில் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. இது தேசத்துக்கே நேரும் பேரிழப்பாகும். எனவே, இதுகுறித்து விரிவாக ஆய்வுசெய்து தேசிய அளவிலான மனிதவள பாதிப்பை மதிப்பீடு செய்வதற்கு ஏதுவாக மீண்டும் மதுவிலக்கு விசாரணை ஆணையம் ஒன்றை மத்திய அரசு அமைத்திட வேண்டும்.
* தமிழ்நாடு அரசு முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
* காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம் உள்ளிட்ட நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது போன்று அய்யா வைகுண்டர் அவதார தினநாளிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அய்யா வைகுண்டர் இயக்கத்தின் தலைவர் பிரஜாபதி அடிகளார் கோரிக்கையை ஏற்றும், இத்தீர்மானம் இயற்றப்பட்டது.
* தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* மது மற்றும் போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வில் மகளிர் சுயஉதவி குழுவினரை ஈடுபடுத்திட வேண்டும்.
* மது மற்றும் போதைப்பொருட்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் அதற்கான மையங்களை உருவாக்கிட வேண்டும். அதேபோன்று மறுவாழ்வு மையங்களை அனைத்து தாலுகாக்களிலும் தொடங்க வேண்டும்.
* டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்று பணிகளை அரசு வழங்கிட வேண்டும்.
* மதுவிலக்கை தேசிய கொள்கையாக அறிவிப்பது, மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதி வழங்க கோருதல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்.
* மதுவிலக்கு பரப்பியக்கத்தில் அனைத்து தரப்பு மக்கள் சக்தியும் ஒருங்கிணைய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.