வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயங்க அனுமதி இல்லை - தமிழக அரசு
|வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயங்க அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை,
வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயங்க அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது, வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயங்க அனுமதி இல்லை. அரசின் எச்சரிக்கையை மீறி இயக்கப்பட்டும் ஆம்னி பஸ்கள் இனி முடக்கப்படும்.
விதிமுறைகளை மீறி இயங்கும் ஆம்னி பஸ்களால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.34.56 கோடி இழப்பு ஏற்படுகிறது. எனவே சட்டத்திற்கு புறம்பாக இயக்கப்படும் ஆம்னி பஸ்களின் இயக்கத்தை இனியும் அனுமதிக்க இயலாது.
விதிமுறைகளை மீறி இயக்கப்படும் பிறமாநில ஆம்னி பஸ்களில் பொதுமக்கள் முன்பதிவு செய்திருந்தால் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு பெற்று இயங்கும் ஆம்னி பஸ்கள் தொடர்ந்து இயங்க எந்த தடையும் இல்லை.
அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு விதிமுறைகளை மீறி இயக்கப்படும் பிறமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் மட்டுமே முடக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.