கோவையில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
|டிரைவரின் துரித நடவடிக்கை காரணமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.
கோவை,
திருவண்ணாமலையில் இருந்து கோவை செல்லும் தனியார் ஆம்னி பஸ் நேற்று இரவு 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை டிரைவர் தாஸ் இயக்கிய நிலையில், பயணிகளில் சிலர் ஆங்காங்கே அவர்களுக்கு தேவையான இடங்களில் இறங்கினர்.
இந்நிலையில், 30 பயணிகளுடன் கோவை மாவட்டம் பீளமேடு அருகே வந்தபோது, பஸ்சின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் தாஸ், பஸ்சை உடனடியாக சாலையின் நடுவே நிறுத்திவிட்டு, உள்ளே இருந்த பயணிகளுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக வெளியேற்றியுள்ளார்.
டிரைவரின் இந்த துரித நடவடிக்கை காரணமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாத நிலையில், தீ பஸ் முழுவதும் பரவி முழுமையாக எரிந்து சேதம் அடைந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த பீளமேடு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீயை முழுமையாக அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.