< Back
மாநில செய்திகள்
மத்திய மந்திரி சுரேஷ் கோபிக்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்
மாநில செய்திகள்

மத்திய மந்திரி சுரேஷ் கோபிக்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்

தினத்தந்தி
|
22 Aug 2024 3:30 AM IST

முல்லைப் பெரியாறு அணை குறித்து ஒரு மத்திய மந்திரி பொறுப்பற்ற முறையில் பேசுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்ட மக்களின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை இன்றைக்கும் வலுவாக இருப்பதற்குக் காரணம் , அந்த அணை புவி ஈர்ப்பு விசையின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது என்றுப் புவி ஈர்ப்பு விசையின் அடிப்படையில் கட்டப்படும் அணைகள் நீர் அழுத்தம் , . நில அதிர்வுகளினால் ஏற்படும் விசை போன்றவற்றை தனது பளுவினால் தாங்கிக் கொள்ளும் சக்தி வாய்ந்தவை என்றும்; எனவே, முல்லைப் பெரியாறு அணையை வயநாடு நிலச்சரிவுடன் ஒப்பிட்டு விஷமப் பிரச்சாரம் செய்வது கண்டிக்கத்தக்கது என்றும் நான் சென்ற வாரம் அறிக்கை வெளியிட்டு இருந்தேன்.

இந்த நிலையில் மத்திய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத் துறை இணை மந்திரி சுரேஷ் கோபி அவர்கள் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது, முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து கவலை எழுப்பும் சமூக வலைதளப் பதிவு ஒன்றை சமீபத்தில் கண்டதாகவும். அணை இடிந்து விழுமா, இல்லையா என்ற கவலை தன் மனதில் ஓடிக் கொண்டிருப்பதாகவும், ஒருவேளை உடைந்தால் யார் பொறுப்பு என்றும், அணையில் தண்ணீர் நிரப்புவதில் தற்போதைய நிலையே தொடர வேண்டுமென உத்தரவிடும் நீதிமன்றம் பொறுப்பேற்குமா அல்லது அதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் பொறுப்பேற்பார்களா என்றும் பேசியிருக்கிறார்.

முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருக்கிறது என்பது உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு சுட்டிக்காட்டியிருக்கிறது என்பதையும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இதனைக் கண்காணிக்க கண்காணிப்புக் குழு ஒன்றும் மத்திய அரசால் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு என்பது காடுகளை அழித்தல், திட்டமிடாத கட்டுமானப் பணிகள், மரங்களை வெட்டி தோட்டத் தொழில்களை மேற்கொள்ளுதல், சட்டவிரோத குடியேற்றங்கள், கனிம வளங்களை சுரண்டுதல் போன்ற மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட காரணங்களால் உருவானது. எனவே, மனிதர்களால் உருவாக்கப்பட்ட காரணங்களால் ஏற்பட்ட நிலச்சரிவை ஒப்பிட்டு, முல்லைப் பெரியாறு அணை குறித்து பேசுவது பொருத்தமாக இருக்காது. வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணத்தை பற்றி தெரிந்து கொள்ளாமல், சமூக வலைதளங்களில் பரவும் கற்பனை வீடியோக்களை பார்த்து பொறுப்புள்ள ஒரு மத்திய மந்திரி பொறுப்பற்ற முறையில் பேசுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. மத்திய மந்திரி என்பவர் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானவர் என்ற நிலையில், ஒரு மாநிலத்திற்கு சாதகமாக மற்றொரு மாநிலத்திற்கு பாதகமாக பேசுவது என்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான செயல் இதுபோன்ற பேச்சு பதற்றத்தை உருவாக்கும். முல்லைப் பெரியாறு அணைக்கு என அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழு இதனை மேற்பார்வையிடுகின்ற நிலையில், இதுகுறித்து மத்திய மந்திரி கருத்து தெரிவிப்பது பொருத்தமாக இருக்காது என்பதையும், இனிவருங்காலங்களில் இதுபோன்று பேசுவதை தவிர்க்க வேண்டுமென்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிபை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்