ஜீவனாம்சம் கேட்டு நோட்டீஸ்: ஆத்திரத்தில் மனைவியை சரமாரியாக வெட்டிய போலீஸ்காரர்
|ஜீவனாம்சம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய மனைவியை போலீஸ்காரர் சரமாரியாக அரிவாளால் வெட்டினார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதி எமனேசுவரம் சிலோன் காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ் பாபு. இவருடைய மகன் நாகேந்திரன் (வயது 33). இவர் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை இடையூர் சங்கேந்தி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும், பரமக்குடியைச் சேர்ந்த சர்மிளா (23) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த நிலையில், நாகேந்திரனின் பெற்றோருக்கும், சர்மிளாவுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து கணவர் வேலை பார்க்கும் ஊரில் சென்று சர்மிளா அவருடன் வாழ்ந்தார். பின்னர் பிரசவத்திற்காக சர்மிளா பரமக்குடியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தையை கணவர் நாகேந்திரனும், அவரது குடும்பத்தினரும் பார்க்க வரவில்லை என்று கூறப்படுகிறது.
பின்பு பெரியவர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி சர்மிளாவை மீண்டும் குழந்தையுடன் கணவர் நாகேந்திரன் பணியாற்றி வரும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு கணவன் - மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் சர்மிளா குழந்தையுடன் புறப்பட்டு, பரமக்குடியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு வந்துவிட்டார்.
அதைத்தொடர்ந்து தனக்கும், குழந்தைக்கும் ஜீவனாம்சம் கேட்டு பரமக்குடி கோர்ட்டில், சர்மிளா வழக்கு தொடர்ந்தார். அதில் வரும் 27-ம்தேதி நாகேந்திரன், கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் நாகேந்திரன், விடுமுறையில் பரமக்குடி எமனேசுவரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு கோர்ட்டு மூலம் அனுப்பப்பட்ட சம்மன் கிடைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நாகேந்திரன் நேற்று முன்தினம் இரவு கையில் அரிவாளுடன் சர்மிளா வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு அவர் சர்மிளாவுடன் சண்டையிட்டு தான் வைத்திருந்த அரிவாளால் தலை, கைகள், கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். சர்மிளாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனடியாக இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பரமக்குடி நகர் போலீசார் சம்பவ இடத்திறகு விரைந்து வந்து அங்கேயே நின்றிருந்த நாகேந்திரனை மடக்கி பிடித்தனர்.
பலத்த காயம் அடைந்த சர்மிளா மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து சர்மிளாவின் தாயார் வசந்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.