நெல்லை ரவுடி கொலை சம்பவம்: 4 பேர் கைது
|நெல்லையில் நடந்த ரவுடி கொலை தொடர்பாக நேற்று 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைக்குளம் பகுதியை சோ்ந்தவர் சிவகுருமுத்துசாமி மகன் தீபக்ராஜா (வயது 30). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும் அவரை ரவுடி பட்டியலில் சேர்த்து போலீசார் கண்காணித்து வந்தனர்.
இவர் கடந்த 20-ந் தேதி தனது வருங்கால மனைவி மற்றும் அவரின் நண்பர்களுடன் நெல்லை- திருச்செந்தூர் சாலையில் உள்ள ஓட்டலில் சாப்பிட வந்தார். அப்போது அங்கு பதுங்கி இருந்த 6 பேர் கொண்ட கும்பல் கண்இமைக்கும் நேரத்தில் தீபக்ராஜாவை வெட்டிக்கொலை செய்தனர்.
இதனையடுத்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். இதற்கிடையே 5 பேர் கும்பலை பிடித்து பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் துணை போலீஸ் கமிஷனர் ஆதர்ஷ் பசேரா விசாரணை நடத்தினார்.
முதற்கட்ட விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பக்கப்பட்டியில் நடந்த கொலை சம்பவத்திற்கு பழிக்குப்பழியாக இந்த கொலை அரங்கேறியுள்ளது தெரியவந்துள்ளது. அந்த கொலைக்கு மூளையாக செயல்பட்டது தீபக்ராஜா என்பதால் அவரை மர்மகும்பல் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.
இந்த நிலையில், தீபக் ராஜா கொலை தொடர்பாக முத்து சரவணன், தம்பன், ஐயப்பன் மற்றும் ஐயப்பன் என 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் கொலை வழக்கோடு எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.