நீட் முறைகேடு: அதிகாரிகளை ஏன் சோதனை செய்யவில்லை - ஐகோர்ட்டு மதுரை கிளை கேள்வி
|நீட் முறைகேட்டில் அதிகாரிகளை ஏன் சோதனை செய்யவில்லை என ஐகோர்ட்டு மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை,
தமிழகத்தில் 2019-ல் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆள்மாறாட்டம் செய்து சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது தெரியவந்தது. இதையடுத்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆள்மாறாட்டம் செய்தவர்கள், இதற்கு உதவிய பெற்றோர், இடைத்தரகர்கள் என பலரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய தருண் மோகன், வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது தேசிய தேர்வு முகமை எதிர்மனுதாராக சேர்க்கப்பட்டது.
இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில், 2019-ல் சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் பலர் முகவரியில் டெல்லி, ராஜஸ்தான், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வர்கள் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியுள்ளனர். ஒரு மாணவருக்கு ஒரே நாளில் 3 மாநிலங்களில் தேர்வு எழுதியிருக்கின்றனர்.
இந்த 3 தேர்வு மையங்களிலும் பெறப்பட்ட மதிப்பெண்ணின் எந்த மாநிலத்தில் அதிக மதிப்பெண் கிடைத்ததோ, அதன் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் பெற்றுள்ளார். ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய நபர்கள் குறித்த விவரங்களைக் கேட்டு தேசிய தேர்வு முகமைக்கு கடிதம் அனுப்பியும் இதுவரை பதில் வரவில்லை எனக் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அரசு வழக்கறிஞர் ஆஜராகி, நீட் மோசடி வழக்கு தொடர்பாக தேசிய தேர்வு முகமை இதுவரை எந்தத் தகவலும் அளிக்கவில்லை. இதனால் விசாரணை மெதுவாகச் செல்கிறது எனத் தெரிவித்தார். தேசிய தேர்வு முகமை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார்.
அப்போது நீதிபதி, வழக்குப்பதிவு செய்து 5 ஆண்டுகள் ஆகிறது. இந்தியாவிலேயே இல்லாத மாணவர் ஒருவருக்கு, மூன்று மாநிலங்களில் தேர்வு எழுதப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் திருமணமான மாணவிகளின் தாலியைக்கூட கழற்றச் சொல்லி சோதனை செய்கிறீர்கள். சிபிசிஐடி கேட்ட ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர்களின் ஆவணங்களை இதுவரை நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை வழங்கவில்லை.
இது தேர்வு முகமை ஆள்மாறாட்ட வழக்கின் குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்படுகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நீட் தேர்வு முறைகேட்டில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் ஏன் சோதனை நடத்த உத்தரவு பிறப்பிக்கக் கூடாது? இந்த நிலை தொடர்ந்தால் அவர்களை கைது செய்யவும் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் எனக் கூறினார். இதையடுத்து மத்திய அரசு தரப்பில், ஜூலை 15-ல் பதிலளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது இதை ஏற்றுகொண்ட நீதிபதி விசாரணையை ஜூலை 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.