நீட் தேர்வு முறைகேடு: சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
|நீட் தேர்வை அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
நீட் தேர்வு முறைகேடு, நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். நீதிபதி ஏ.கே.ராஜன் குழு பரிந்துரையின்படி நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
அதன்பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
மருத்துவத் துறையிலும், பொருளாதார குறியீடுகளிலும் நாட்டின் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அனைத்தையும் ரத்து செய்தவர் கலைஞர் கருணாநிதி. நீட் தேர்வு அமலான பிறகு மருத்துவ படிப்பு கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு எட்டாக்கனியாக போய்விட்டது.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் திமுக மாணவர், மருத்துவர் அணி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. நீட் தேர்வை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. நீட் தேர்வில் சமூகத்தில் அக்கறை உள்ள அனைவரிடமும் அசைக்க முடியாத கருத்தொற்றுமை உள்ளது. நீட் நுழைவு தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே எதிர்த்து வருகிறோம்.
நீட் தேர்வில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் குழு எடுத்துக்கூறியிருந்தது. நீட் தேர்வுக்கு எதிராக திமுக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது. மத்திய அரசு கோரிய கேள்விகள் அனைத்துக்கும் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. போட்டித் தேர்வுகளால் நமது மாணவர்கள் நிலை குலைந்துள்ளனர்.
நீட் தேர்வு தொடர்பான தமிழ்நாட்டின் எதிர்ப்புக் குரல் தற்போது நாடு முழுவதும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. மாநில மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான உரிமையை மாநில அரசுகளிடம் இருந்து பறிக்கும் வகையில் உள்ள நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டின் நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்
நீட் தேர்வை கைவிடும் வகையில் மருத்துவ ஆணைய சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக வலியுறுத்துகிறது. நீட் தேர்வு வேண்டாம் என்பதால் அதனை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவுக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.