இந்தியாவின் தேசிய ஆளுமை கருணாநிதி - மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் புகழாரம்
|கருணாநிதியின் அரசியல் போராட்டங்கள் தீவிரமானவை; துணிச்சல்மிக்கவை என்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
சென்னை,
மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தது. அதற்கு, மத்திய அரசும் அனுமதி வழங்கியது. இந்த நிலையில், கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டார். அவரிடமிருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாணயத்தைப் பெற்றுக் கொண்டார். பின்னர் உரையாற்ற வந்த மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், அனைவரும் எழுந்து நின்று மகத்தான தலைவர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்த அழைக்கிறேன் என்று அழைப்பு விடுத்தார். அதைத் தொடர்ந்து அரங்கில் இருந்தவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்தனர். பின்னர் பேசிய மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறியதாவது:-
கருணாநிதியின் அரசியல் போராட்டங்கள் தீவிரமானவை; துணிச்சல்மிக்கவை. இந்தியாவின் தேசிய ஆளுமை கருணாநிதி. நாட்டின் தலைசிறந்த நிர்வாகியான கருணாநிதி மத்தியில் வெற்றிகரமான கூட்டணி அரசமைய காரணமானவர். கருணாநிதியின் பொது நலத்தொண்டால் நாட்டிற்கே நன்மை ஏற்பட்டுள்ளது. 1960 முதல் தற்போது வரை ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக தி.மு.க.வை வளர்த்தவர் கருணாநிதி.
கூட்டாட்சித் தத்துவத்திற்கு பாடுபட்ட கருணாநிதி நாட்டு நலனுக்காகவும் குரல் கொடுத்தவர். தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அரசியல் வரைபடத்தை உருவாக்கியதில் கருணாநிதிக்கு முக்கிய பங்கு உண்டு. பல்வேறு தேசிய கட்சிகளுடன் நல்லுறவை பேணி வந்தவர் கருணாநிதி. விளிம்பு நிலை மக்களுக்கு தரமான கல்வியை வழங்க திட்டங்களை கொண்டு வந்தவர் கருணாநிதி.
மகளிர் அதிகாரம் பெற கருணாநிதி கொண்டு வந்த மகளிர் சுய உதவிக்குழுக்கள் உதவுகின்றன. பாலின சமத்துவம் பேணும் வகையில் மகளிர் சுய உதவிக்குழு திட்டத்தை கருணாநிதி கொண்டு வந்தார். இவ்வாறு அவர் கூறினார்.