< Back
மாநில செய்திகள்
சிவகாசி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை : 3 பேர் கைது
மாநில செய்திகள்

சிவகாசி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை : 3 பேர் கைது

தினத்தந்தி
|
25 July 2024 8:05 AM IST

காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

சிவகாசி,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திராநகரை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகன் கார்த்திக்பாண்டி (வயது 26). இவர் சிவகாசியில் கங்காகுளம் ரோட்டில் உள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவரும் சிவகாசி அருகே அய்யம்பட்டியை சேர்ந்த பொன்னையா மகள் நந்தினியும் காதலித்து வந்தனர். 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த காதல் திருமணத்திற்கு நந்தினியின் சகோதரர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

புதுமாப்பிள்ளை கார்த்திக் பாண்டியும், அவரது மனைவி நந்தினியும் தினமும் காலையில் மோட்டார் சைக்கிளில் அய்யம்பட்டியில் இருந்து சிவகாசி ரிசர்வ் லைனுக்கு வருவது வழக்கம். நந்தினி அதே பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார். நந்தினியை தினமும் காலையில் இறக்கி விட்டு பின்னர் இரவில் வீட்டுக்கு கார்த்திக்பாண்டி அழைத்துச்செல்வது வழக்கம்.

நேற்று இரவு வேலை முடிந்து நந்தினி தனது கணவருக்காக காத்திருந்தார். அப்போது கார்த்திக் பாண்டி, நந்தினியை அழைத்துச் செல்ல அங்கு வந்தார். அங்கு சிலர் கார்த்திக்பாண்டியை வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பி சென்றனர். இதில் பலத்த காயம் அடைந்த கார்த்திக் பாண்டி, நந்தினி வேலை செய்த கடையின் முன்பே நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

கணவர் அரிவாளால் வெட்டப்பட்டதை அறிந்து சூப்பர் மார்க்கெட்டில் இருந்து நந்தினி அலறியபடி ஓடிவந்தார். கணவரின் உடலை பார்த்து கதறினார். இந்த காட்சி மிகவும் பரிதாபத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் காட்டுத்தீயாக பரவியதால் சிவகாசி -ஸ்ரீவில்லிபுத்தூர் மெயின் ரோட்டில் ஏராளமானோர் திரண்டனர். அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லாவும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கொலை செய்யப்பட்ட கார்த்திக்பாண்டி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். கொலையாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

போலீசார் நடத்திய விசாரணையில், கார்த்திக் பாண்டியின் காதல் மனைவியின் சகோதரர்கள் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இந்த ஆணவ படுகொலை தொடர்பாக பாலமுருகன், தனபாலன் மற்றும் அவர்களின் நண்பர் சிவா ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்