< Back
மாநில செய்திகள்
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை : பட்டதாரி வாலிபர்  கைது -பரபரப்பு வாக்குமூலம்
மாநில செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை : பட்டதாரி வாலிபர் கைது -பரபரப்பு வாக்குமூலம்

தினத்தந்தி
|
19 July 2024 6:42 PM IST

கடலூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து கைதான பட்டதாரி வாலிபர் போலீசாருக்கு பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடலூர்,

கடலூர் அருகே உள்ள காராமணிக்குப்பம் ராஜாராம் நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(வயது 70). இவர், தனியார் சர்க்கரை ஆலையில் மருந்தாளுனராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கமலேஸ்வரி (60). இந்த தம்பதிக்கு சுரேந்திரகுமார், சுகந்த்குமார்(40) ஆகிய 2 மகன்கள். இதில் சுரேந்திரகுமார், ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சுகந்த்குமார் ஐதராபாத்தில் உள்ள ஐ.டி. துறையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து விவாகரத்து பெற்று விட்டார். இவர்களுடைய மகன் நிஷாந்த் (10). இவன் அங்குள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 6 மாதத்திற்கு முன்பு சுரேஷ்குமார் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இதனால் கமலேஸ்வரி தனது மகன் சுகந்த்குமார், பேரன் நிஷாந்த் ஆகியோருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி காலையில் கமலேஸ்வரியின் வீட்டின் முன்பக்க கேட் பூட்டுப்போட்டு பூட்டி இருந்தது. ஆனால் வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. துர்நாற்றமும் வீசியது. இது பற்றி அந்த தெரு மக்கள் கொடுத்த தகவலின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் விரைந்து வந்து பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு வீட்டின் பல இடங்களில் ரத்தக்கறை படிந்திருந்தது. கமலேஸ்வரி, சுகந்த்குமார், நிஷாந்த் ஆகிய 3 பேரும் கொடூரமாக வெட்டப்பட்டு, உடல்கள் பாதி எரிந்த நிலையில் கிடந்தது.

கடலூரில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் துப்பு துலக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், 3 பேரும் 12-ந்தேதி கொலை செய்யப்பட்டு இருப்பதும், 14-ந்தேதி இரவு மீண்டும் கொலையாளிகள் வீட்டுக்கு வந்து தடயங்களை அழிப்பதற்காக 3 உடல்கள் மீதும் பெட்ரோல் ஊற்றியும், துணிகளை போட்டு தீ வைத்து எரித்ததும் தெரிய வந்தது.

இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிப்பதற்காக சுகந்த்குமாரின் சகோதரர் சுரேந்திரகுமார் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியும் துப்பு கிடைக்கவில்லை. கடைசி முயற்சியாக சுகந்த்குமாரின் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களின் செல்போன் எண்களை வாங்கி சைபர் கிரைம் உதவியுடன் தீவிரமாக கண்காணித்தனர்.அப்போது தான் 3 பேர் கொலை செய்யப்பட்ட நாளில் இருந்து சுகந்த்குமார் வசித்து வரும் தெருவை சேர்ந்த பழனி மகன் சங்கர் ஆனந்த்(21) என்பவரது செல்போன் சுவிட்சு ஆப் செய்யப்பட்டு இருந்தது. அவரும் தலைமறைவாகி இருந்தது தெரிய வந்தது. இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. அவரை தேடும் பணியில் இறங்கினார்கள். இதையடுத்து சென்னையில் பதுங்கி இருந்த சங்கர் ஆனந்தையும், அவரது நண்பரான காராமணிக்குப்பத்தை சேர்ந்த ஷாகுல்அமீது(20) ஆகிய 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். 3 பேரை கொலை செய்ததையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். இது தொடர்பாக சங்கர் ஆனந்த் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அது பற்றிய விவரம் வருமாறு:-

எனது தந்தை பழனி கடந்த 2021-ம் ஆண்டு இறந்தார். இதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் எனது தாய் லட்சுமி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். மேலும் எனது சகோதரர் ஹரி சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் தாய், தந்தை இல்லாமல் வீட்டில் தனியாக வசித்து வந்தேன். எனது தாய் மற்றும் சுகந்த்குமார் இடையே பழக்கம் இருந்ததாக தகவல் பரவியது. இதன் காரணமாக தான் எனது தாய் தற்கொலை செய்ததாக எண்ணினேன்.

இதனால் சுகந்த்குமாரை கொலை செய்ய கடந்த 6 மாதமாக திட்டம் தீட்டினேன். எனது வீட்டுக்கு அருகில் அவர்கள் வீடு இருப்பதால், நான் அவர்கள் வீட்டு வழியாக செல்லும் போதெல்லாம் கமலேஸ்வரி என்னை காரணமின்றி திட்டுவார். மேலும் அவரது பேரன் நிஷாந்த் என்னிடம் சரியாக பேசாமல் அவரது பாட்டி போல் பேசுவான். இதன் காரணமாக எனக்கு நாளுக்கு நாள் கோபம் அதிகரித்து வந்தது.

சம்பவத்தன்று மாலை கமலேஸ்வரி வீட்டுக்குள் சென்று யாருக்கும் தெரியாமல் அவர்களது வீட்டு மாடி படிக்கட்டு கீழே ஒளிந்திருந்தேன். பின்னர் நள்ளிரவு நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத நிலையில், கமலேஸ்வரி வீட்டின் கதவை தட்டினேன். அப்போது அவரது மகன் சுகந்த்குமார் கதவை திறந்து வெளியே வந்தபோது கத்தியால் அவரை சரமாரியாக வெட்டினேன். இதில் அலறி துடித்த சுகந்த்குமார் ஓடிய போது அவரது தாயார் கமலேஸ்வரி வந்தார். அவரையும் வெட்டிக்கொலை செய்தேன்.

இருப்பினும் ஆத்திரம் தீராத நான் அறைக்குள் சென்று மறைந்திருந்த சுகந்த்குமாரை , அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று, அவரை வெட்டினேன். அவர் தடுத்து என்னை கத்தியால் வெட்ட முயன்ற போது கையால் தடுத்தேன். அப்போது எனது இடது கை ஆள்காட்டி விரல் வெட்டி தொங்கியது. பிறகு அவரிடம் இருந்த கத்தியை பிடுங்கி அவரை சரமாரியாக வெட்டினேன். இதில் ரத்த வெள்ளத்தில் சுகந்த்குமார் இறந்து விட்டார்.

பிறகு வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தேன். அதில் நகை, பணம் இருந்தது. அதை எடுத்து விட்டு திரும்பிய போது, திடீரென சிறுவன் நிஷாந்த் தூக்கத்தில் இருந்து எழுந்து வந்து என்னை பார்த்து விட்டான். அவனுக்கு என்னை நன்றாக தெரியும் என்பதால், அவன் வெளியில் சொல்லி விடக்கூடாது என்பதற்காக சிறுவனையும் கொலை செய்ய முடிவு செய்து அவனையும் கொலை செய்தேன். பின்னர் சுகந்த்குமார் வைத்திருந்த மது பாட்டிலை எடுத்து குடித்து விட்டு, சிகரெட் பிடித்தேன்.இருப்பினும் விரலில் ஏற்பட்ட வெட்டுக்காயத்தால் வலி தாங்காமல் , அங்கிருந்த துணியால் கைவிரலை கட்டினேன். பின்னர் அதிகாலை நேரத்தில் அவர்களது பூட்டை எடுத்து வெளி இரும்பு கேட்டை பூட்டி விட்டு, எதுவும் தெரியாதது போல் சென்று விட்டேன்.இதற்கிடையில் கைவிரலில் ஏற்பட்ட வெட்டுக்காயத்தால் வலி தாங்க முடியாத நிலையில் எனது விரலை பிடுங்கி தூக்கி வீசினேன்.

பின்னர் 2 நாட்கள் அவர்களது வீட்டை நோட்டமிட்டு, யாரேனும் கண்டுபிடித்தார்களா? என்று பார்த்தேன். ஆனால் யாரும் கண்டுபிடிக்கவில்லை. பிறகு எனது நண்பர் சாகுல் ஹமீதை பெட்ரோல் வாங்கி வர கூறினேன். அதன்படி அவர் பெட்ரோல் வாங்கி வந்ததும், அதை எடுத்துக்கொண்டு மீண்டும் சுகந்த்குமார் வீட்டுக்குள் சென்று, இறந்து கிடந்த 3 பேரின் உடல்கள் மீது பெட்ரோல் ஊற்றியும், அவர்கள் வீட்டில் இருந்த துணிகளை மேலே வைத்து தீ வைத்து எரித்தேன். இதில் அவர்களது உடல் கருகி எரிந்தது. அதன்பிறகு சென்னைக்கு தப்பிச்சென்றேன். ஆனால் போலீசார் என்னை பிடித்து விட்டார்கள். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட சங்கர் ஆனந்த் பி.எஸ்.சி. பட்டதாரி ஆவார். அவரது நண்பர் சாகுல்ஹமீது கடலூர் அரசு கல்லூரியில் விலங்கியல் 2-ம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்