< Back
மாநில செய்திகள்
பூட்டிய வீட்டில் தாய்-மகன் பிணமாக மீட்பு: மாந்திரீகம் நடந்ததா? என விசாரணை
மாநில செய்திகள்

பூட்டிய வீட்டில் தாய்-மகன் பிணமாக மீட்பு: மாந்திரீகம் நடந்ததா? என விசாரணை

தினத்தந்தி
|
4 July 2024 11:09 AM IST

ஸ்ரீராம்குமார் திருச்சியில் புகைப்பட கலைஞராக பணிபுரிந்து வந்தார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு பெரம்பலூர் முத்துநகரில் சொந்தமாக வீடுகள் உள்ளன. அந்த வீடுகளை அவர் வாடகைக்கு விட்டிருந்தார். அதில் ஒரு மாடி வீட்டில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த சர்வானந்தம் என்பவரின் மனைவி ஆனந்தியும் (வயது 66), மகன் ஸ்ரீராம்குமாரும் (34) கடந்த ஒரு ஆண்டாக வசித்து வந்தனர்.

ஸ்ரீராம்குமார் திருச்சியில் புகைப்பட கலைஞராக பணிபுரிந்து வந்தார். அவருக்கு திருமணமாகவில்லை. நேற்று காலை அந்த வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசதொடங்கியது. இதனால் அக்கம், பக்கத்தினர் இதுகுறித்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை திறக்க முயன்றனர். ஆனால் வீட்டின் கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது.

இதையடுத்து போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் ஹாலில் ஆனந்தியின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. படுக்கை அறையில் ஸ்ரீராம்குமார் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். வீட்டில் தாயும்-மகனும் இறந்து கிடந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் அங்கு பொதுமக்கள் கூட்டம் கூடியது. பின்னர் போலீசார் கூட்டத்தை கலைத்து விட்டு, உடல்களை பார்வையிட்டு விசாரணையை தொடங்கினர்.

மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவியும் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அப்போது ஆனந்தியின் உடலின் மேல் துணி போர்த்தப்பட்டிருந்தது. மேலும் அவரது உடலை சுற்றி தர்ப்பை புல், எலுமிச்சைப்பழம், மிளகாய், தேங்காய், மஞ்சள் தூள், மிளகாய் பொடி, மல்லி பொடி, ஆரஞ்சுப்பழம், உப்பு உள்ளிட்ட பொருட்கள் சுற்றி போடப்பட்டிருந்தன.

இதனால் தாய் ஆனந்தியை கொலை செய்து விட்டு மாந்திரீகம் செய்து விட்டு மகன் ஸ்ரீராம்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ஆனந்தி இறந்ததை வெளியே கூறாமல் அவருக்கு வீட்டில் இறுதிச்சடங்கு செய்து விட்டு ஸ்ரீராம்குமாரும் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து வீட்டில் நடத்திய போலீசாரின் சோதனையில் ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் ஆனந்தியின் குடும்பத்தை பற்றி உருக்கமாக எழுதப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அந்த கடிதத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் தாய்-மகன் இறந்து கிடந்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் சோகத்தையும்,பரபரப்பையும் ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்