< Back
மாநில செய்திகள்
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் அமைச்சர் துரைமுருகன்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் அமைச்சர் துரைமுருகன்

தினத்தந்தி
|
13 July 2024 10:20 PM IST

சென்னை அண்ணா அறிவாலயம் வந்திருந்த அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

சென்னை

நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் 13 தொகுதிகளிலும் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றது. இதில், அனைத்து தொகுதிகளிலும் கட்சி வாரியாக பெற்ற வெற்றி விவரங்கள் வெளியாகின.

இதனைத்தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. வெற்றிபெற்றதையடுத்து பல்வேறு இடங்களில் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தி.மு.க.வினர் கொண்டாடினர். அதேபோல அண்ணா அறிவாலயத்திலும் தி.மு.கவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா அறிவாலயம் வந்த தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அங்கு திரண்டிருந்த தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இந்த சூழலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சென்னை அண்ணா அறிவாலயம் வந்திருந்த அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவசர சிகிச்சைப்பிரிவில் அமைச்சர் துரைமுருகனை அனுமதித்து மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் துரைமுருகன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்