< Back
மாநில செய்திகள்
சிறப்பு பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவு - தமிழக அரசு உத்தரவு
மாநில செய்திகள்

சிறப்பு பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவு - தமிழக அரசு உத்தரவு

தினத்தந்தி
|
27 May 2024 11:31 PM GMT

அரசு நிதியுதவி சிறப்பு பள்ளிகளில் பயிலும் 6 ஆயிரத்து 6 குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் லட்சுமி, சமூக நல ஆணையருக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசு நிதியுதவி பெறும் 193 தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் சிறப்பு பள்ளிகள் மற்றும் ஆரம்ப நிலைய பயிற்சி மையங்களில் பயிலும் 6 ஆயிரத்து 6 குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் விரிவுப்படுத்தப்படுகிறது. அதற்கு ஏற்படும் கூடுதல் நிதி ரூ.15 லட்சத்து 36 ஆயிரம் நிதி நிர்வாக அனுமதி வழங்கப்படுகிறது.

எனவே சிறப்பு பள்ளிகளில் காலை வந்து மாலை வீடு திரும்பும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கு அருகில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையுடன் இணைத்து சத்துணவு பயனாளிகளின் எண்ணிக்கை நிர்ணயம் செய்யப்படும். பள்ளிகளில் வழங்கப்பட்டு வரும் சத்துணவு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் மதிய உணவு இரண்டும் வெவ்வேறு உணவு வகைகளாக இருக்கிறது.

எனவே அரசு நிதியுதவி சிறப்பு பள்ளிகளில் பயிலும் 6 ஆயிரத்து 6 குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்படும். மேலும் ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிலும் 2 ஆயிரத்து 485 மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் இணை உணவாக சத்துமாவும், மதிய உணவுடன் வாரத்திற்கு 3 முட்டைகள் மற்றும் நாளொன்றுக்கு 60 கிராம் செறிவூட்டப்பட்ட பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்கள் அருகில் உள்ள குழந்தைகள் மையங்களின் மூலம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்