வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
|வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை,
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் நுரையீரல் தொற்று காரணமாக இன்று உயிரிழந்தார். வணிகர் சங்கத்தை மேம்படுத்துவதற்காகவும் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது;
"தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். வணிகர் பெருமக்களின் நலனுக்காக உழைத்த அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி;
"வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் திரு. வெள்ளையன் அவர்கள் காலமான செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன். பொதுப் பிரச்சினைகளுக்காகவும், வணிகர்கள் ஒற்றுமைக்காகவும், உரிமைகளுக்காகவும், தொடர்ந்து குரல் கொடுத்து வந்த அவரது திடீர் மறைவு, சமூகத்திற்குப் பேரிழப்பாகும்.
வெள்ளையன் அவர்கள் குடும்பத்தினருக்கும், வணிகர் சங்கப் பேரவை உறுப்பினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்."
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி;
"தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் உடல்நலக் குறைவால் இன்று பிற்பகலில் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
தமிழ்நாட்டில் பல்வேறு அணிகளாக பிரிந்து கிடந்த வணிகர்களை ஒருங்கிணைந்து ஒரு குடைக்குள் கொண்டு வந்து வலிமையான அமைப்பை கட்டமைத்தவர் வெள்ளையன். வணிகர்களின் உரிமைகளுக்காக ஏராளமான போராட்டங்களை நடத்தி, பல கோரிக்கைகளை வென்றெடுத்தவர். என்னால் நிறுவப்பட்ட தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் கடைகளின் பெயர்ப்பலகைகளை தமிழில் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இயக்கம் நடத்திய போது அதற்காக என்னுடன் துனை நின்றவர்.
ஈழத்தமிழர் நலனுக்காக பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர். வெள்ளையனின் மறைவு வணிகர் சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. வெள்ளையனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், வணிகர் அமைப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்."
டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
"தமிழக வணிகர்களின் பாதுகாவலராகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் திரு.வெள்ளையன் அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
திரு.வெள்ளையன் அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் சக வணிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்."