படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மாயாவதி நேரில் அஞ்சலி
|படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மாயாவதி அஞ்சலி செலுத்தினார்.
சென்னை,
கொலையான ஆம்ஸ்ட்ராங் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை பெரம்பூர் பந்தர் கார்டன் தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டு உள்ளது. ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவரும், உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான மாயாவதி வருவதாக தகவல் வெளியானது.
இதை மாயாவதியும் உறுதி செய்து சிறிது நேரத்தில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார். அதன்படி அவர், இன்று காலை 9.30 மணியளவில் உத்தரப்பிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார். மாயாவதி வருகையை ஒட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. சென்னை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் பெரம்பூருக்கு மாயாவாதி சென்றார். பின்னர் அங்குள்ள மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டு இருந்த ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மாயாவதி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அங்கு இருந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.