ஆண்டு பல நீண்டு வாழ்வீர்... கவிஞர் வைரமுத்து ஆசிரியர் தின வாழ்த்து
|எம்.ஜி.ஆரும் சிவாஜியும் உச்சத்திலிருந்தபோது நீங்களே எங்கள் கதாநாயகர்கள் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஆசிரியர் தினத்தையொட்டி கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
"ஆசிரியப் பெருமக்களை நெற்றி நிலம்பட வணங்குகிறோம். உங்களை எங்கள் சூரியோதயம் உங்கள் வகுப்பில் நிகழ்ந்தது. உங்கள் சொற்களில் இருள் உடைந்தது; எம்.ஜி.ஆரும் சிவாஜியும் உச்சத்திலிருந்தபோது நீங்களே எங்கள் கதாநாயகர்கள்.
நாங்கள் கேட்ட முதல் சங்கீதம் கரும்பலகையில் உங்கள் 'சாக்பீஸ்' சத்தம். உங்களைக் கடக்கையில் நெஞ்சு கடக்குமே ஒரு மெல்லிய அச்சம் அதுதான் உங்கள் மதிப்பின் உச்சம். தேர்வுத் தாளில் எப்போதேனும் எழுதுவீர்களே 'நன்று' என்று ஆகா; ஒற்றைச் சொல்லில் ஒருபுட்டி ரத்தம்.
உங்கள் கிளையிற் பழுத்த பழங்கள் எங்கெங்கோ ஏற்றுமதியாகிப்போக உங்கள் வேர்கள் மட்டும் இங்கே... ஆங்காங்கே... ஓய்வுறுநாளில் கல்விக் கூடத்தில் பதிந்த உங்கள் கடைசிப் பார்வையும் விடைபெறுநாளில் உங்களை நாங்கள் பார்த்த கண்ணீர்ப் பார்வையும் வேறு வேறல்ல. ஆண்டு பல நீண்டு வாழ்வீர் ஐயன்மீர்" என்று தெரிவித்துள்ளார்.