< Back
மாநில செய்திகள்
2 நாளில் வேறு ஒருவருடன் திருமணம்... வீட்டின் சுவர் ஏறி குதித்து காதலனை கரம்பிடித்த இளம்பெண்
மாநில செய்திகள்

2 நாளில் வேறு ஒருவருடன் திருமணம்... வீட்டின் சுவர் ஏறி குதித்து காதலனை கரம்பிடித்த இளம்பெண்

தினத்தந்தி
|
6 July 2024 8:47 AM IST

பெமிஷாவுக்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) திருமணம் நடைபெற இருந்தது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்தவர் செல்வின் தேவகுமார். இவருடைய மகள் பெமிஷா (வயது 23). எம்.ஏ. பட்டதாரி. இவர் மேற்கு நெய்யூரை சேர்ந்த ஸ்ரீராம் (24) என்பவரை கடந்த 6 வருடமாக காதலித்து வந்துள்ளார். ஸ்ரீராம் பி.இ. படித்துவிட்டு பெங்களூருவில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது காதல் விவகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெமிஷாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் அவர் காதலை கைவிட மாட்டேன் என உறுதியாக இருந்தார். அவரை பெற்றோர் சமாதானம் செய்தனர். ஒரு கட்டத்தில் மகளை வீட்டு சிறையில் வைத்தனர்.

மேலும் பெமிஷாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். அதற்கு சம்மதம் தெரிவித்து பொற்றோருடன் உடன்பட்டு நடப்பது போல் நடிக்க தொடங்கினார் பெமிஷா. அதன்படி பெமிஷாவுக்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) திருமணம் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளில் பெமிஷாவின் குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

இதனால் பெமிஷாவுக்கு ஒருவித அச்சம் ஏற்பட்டது. எப்படியாவது தப்பித்து சென்றுவிட வேண்டும் என்று திட்டம் தீட்டினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பெமிஷா வீட்டின் பின்புறம் நின்று கொண்டிருந்தார். அப்போது குடும்பத்தினரின் கண்காணிப்பை மீறி கண்ணிமைக்கும் நேரத்தில் சுவர் ஏறி குதித்து தப்பியோடினார். பின்னர் காதலன் ஸ்ரீராமுவுடன் குளச்சல் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.

இதையடுத்து போலீசார் இருவரது பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பெற்றோர்கள் போலீஸ் நிலையத்துக்கு விரைந்து வந்தனர். பெமிஷாவின் பெற்றோர் மகளை தங்களுடன் அனுப்பி வைக்குமாறு போலீசிடம் தெரிவித்தனர். ஆனால் பெமிஷா காதலன் ஸ்ரீராமுடன் செல்வதில் உறுதியாக இருந்தார். இருவரும் மேஜர் என்பதால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் காதல் ஜோடிக்கு அறிவுரை வழங்கி பதிவு திருமணம் செய்யுமாறு கூறி அனுப்பி வைத்தனர். திருமணத்திற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் சுவர் ஏறி குதித்து காதலனை இளம்பெண் கரம்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்