மதுரை தீ விபத்து: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விடுதி மேலாளர் உயிரிழப்பு
|தீ விபத்தில் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
மதுரை,
மதுரை மாவட்டம் கட்ராபாளையம் பகுதியில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வந்தது. விசாகா என்ற பெயரிலான அந்த பெண்கள் தங்கும் விடுதியில் கடந்த 12ம் தேதி அதிகாலை 4 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர். 3 பெண்கள் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தீ விபத்து தொடர்பாக விடுதியை நடத்தி வந்த இன்பா என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தீக்காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விடுதி மேலாளார் புஷ்பா இன்று சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். தீ விபத்தில் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.