பெரியார் நினைவிடத்தில் த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை
|தென்னகத்தின் சாக்ரட்டீஸ், தந்தை பெரியார் என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
சென்னை,
தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாளையொட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சுய விடுதலை வேட்கையின் மூலம், ஏற்றத் தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமைத் தளைகளை அறுத்தெறிந்தவர்; மக்களைப் பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டியவர்.
சமூகச் சீர்திருத்தவாதி, பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரட்டீஸ், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில். அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண்கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்" இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் நினைவிடத்தில் த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார். எளிய முறையில் மலர் மாலையை தானே எடுத்துக்கொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து விஜய் மரியாதை செலுத்தினார். அப்போது த.வெ.க.பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் , நிர்வாகிகள்உள்ளிட்டோர் உடனிருந்தனர். கட்சி அறிவிப்புக்கு பின் பொதுவெளியில் தலைவர் ஒருவரின் சிலைக்கு விஜய் மரியாதை செலுத்துவது இதுவே முதல் முறையாகும்.