< Back
மாநில செய்திகள்
கம்பீர தமிழ்நாட்டை உருவாக்கி காட்டுவோம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநில செய்திகள்

கம்பீர தமிழ்நாட்டை உருவாக்கி காட்டுவோம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தினத்தந்தி
|
3 Jun 2024 8:15 AM IST

அனைத்து மாநிலங்களும் திரும்பி பார்க்கும் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

நவீன தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பி கருணாநிதி. இந்த பூமி பந்தில் வாழும் தமிழர்களுக்கு எல்லாம் குடும்ப தலைவர். இந்திய நாடே அண்ணாந்து பார்த்த அரசியல்ஞானி. எல்லா ஆண்டும் கலைஞர் ஆண்டே. அவர் ஆண்ட ஆண்டும், வாழ்ந்த ஆண்டும் மட்டும்மல்ல எல்லா ஆண்டும் கலைஞர் ஆண்டே.

வீழ்ந்து கிடந்த தமிழ் சமுதாயத்திற்கு விடிவெள்ளியாக தோன்றி வாழும் காலத்தில் ஒளி தரும் உதயசூரியனாய் வாழ்ந்து, நிறைந்து பிறகும் கலங்கரை விளக்கமாக வழிகாட்டி கொண்டிருப்பவர்தான் கலைஞர். இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் திரும்பி பார்க்கும் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறோம். உலக நாடுகளோடு போட்டி போடும் அளவுக்கு தொழில் வளர்ச்சி கண்டு வருகிறோம்.

மகளிர் மனங்களில் மகிழ்ச்சியின் விளையாட்டு... மாணவ-மாணவர்களின் உள்ளங்களில் உணர்ச்சியின் தாலாட்டு... விவசாயிகளின் எண்ணங்களில் பசுமையின் நீராட்டு... இதுதானே நீங்கள் நினைத்தது. நீங்கள் கனவு கண்ட கம்பீர தமிழ்நாட்டை உருவாக்கிக் காட்டுகிறோம். நீங்கள் நினைத்தீர்கள். நாங்கள் செய்து காட்டி வருகிறோம். நீங்கள் இருந்து செய்ய வேண்டியதை உங்கள் மகனாக நான் செய்துவருகிறேன். நீங்கள் பாதை அமைத்தீர்கள்.. நாங்கள் பயணத்தை தொடர்கிறோம். உங்கள் பெயரை காக்க எந்நாளும் உழைப்போம். உழைப்பு... உழைப்பு... உழைப்பு... இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்