குவைத் தீ விபத்து: த.வெ.க. தலைவர் விஜய் இரங்கல்
|குவைத் தீ விபத்தில் 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்ததாக த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
சென்னை,
குவைத் நாட்டின் மங்காப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில்,
"குவைத் நாட்டின் மங்காப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழ்நாடு, கேரளம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அகால மரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். தீவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டுகிறேன்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.