< Back
மாநில செய்திகள்
குவைத் தீ விபத்து: அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை
மாநில செய்திகள்

குவைத் தீ விபத்து: அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை

தினத்தந்தி
|
13 Jun 2024 7:10 AM GMT

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பத்தினருக்கு உதவுவது தொடர்பாக அயலக நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் துறை அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

சென்னை,

குவைத்தின் மெங்காப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய சுமார் 200 பேர் வசித்து வந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் கேரளம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களாவர். குடியிருப்பின் ஒரு தளத்தின் சமையல் அறையில் ஏற்பட்ட தீ விபத்து பல்வேறு தளங்களுக்கும் பரவியது. இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின, இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த தமிழக அயலக நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தூதரகம் மூலம் முதல்கட்டமாக கிடைத்த தகவலின்படி தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் தமிழக அயலக நலத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று காலை அவரது வீட்டில் சந்தித்து, தற்போதைய நிலவரம் குறித்து எடுத்துரைத்தனர். இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு உடல்களை மீட்டுத் தரவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குவைத் தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் எண்களைத் தொடர்பு கொள்ளவும்:

இந்தியாவிற்குள்: +91 1800 309 3793

வெளிநாடு: +91 80 6900 9900, +91 80 6900 9901

மேலும் செய்திகள்